ஜமைக்கா பிரதமர் திரு.ஆன்ட்ரு மைக்கேல் ஹோல்னஸ், பிரதமர் திரு.மோடியுடன் தொலைபேசியில் பேசி, அவருக்கும், தேர்தலில் அவரது கட்சி பெற்ற வரலாற்று வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
திரு.ஹோல்னசின் அன்பான வாழ்த்துகளுக்கும், முன்னதாக அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கும் பிரதமர் திரு.மோடி நன்றி கூறினார். ஜமைக்கா மற்றும் ஒட்டு மொத்த கரிபிய பிராந்தியத்துடனான உறவுகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், கரிகோம் வளர்ச்சி நிதியத்தில் சர்வதேச வளர்ச்சி பங்குதாரராக ஆவது என்ற இந்தியாவின் முடிவானது, அந்தப் பிராந்தியத்தில் ஆழமான பொருளாதார ஒத்துழைப்பிற்கான வலுவான விருப்பத்தின் காரணமாகத்தான் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
ஜமைக்கா மற்றும் கரிபியனுடனான உறவுகளில் இந்தியா கவனம் செலுத்துவதை பிரதமர் திரு.ஹோல்னஸ் வரவேற்றார். பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிப்பது உள்ளிட்ட இருதரப்பு நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் பிரதமர் திரு.மோடியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார்.