ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும் அபுதாபி ஆட்சியாளருமான எனது சகோதரர் எச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், 2023 டிசம்பர் 1 அன்று சிஓபி -28 இன் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் துபாய் செல்கிறேன்.
பருவநிலை நடவடிக்கை தளத்தில் இந்தியாவுக்கு முக்கிய கூட்டாளியாக இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ் இந்த முக்கியமான நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது நாகரிக நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடரும்போது கூட, இந்தியா எப்போதும் பருவநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நமது ஜி20 தலைமைத்துவத்தின் போது, பருவநிலை நமது முன்னுரிமையில் முதன்மையாக இருந்தது. புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தில் பருவநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த பல உறுதியான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை சிஓபி -28 முன்னெடுத்துச் செல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், பருவநிலை நடவடிக்கை குறித்த எதிர்கால போக்கிற்கான பாதையை வகுப்பதற்கும் சிஓபி28 ஒரு வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டிய உலகளாவிய தெற்கின் குரல் உச்சிமாநாட்டில், சமத்துவம், பருவநிலை நீதி மற்றும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகளின் அடிப்படையில் பருவநிலை நடவடிக்கையின் தேவை குறித்தும், தகவமைப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் பேசுபொருளாக இருந்தது. வளரும் நாடுகளின் முயற்சிகளுக்கு போதுமான பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ஆதரவளிப்பது முக்கியம். நிலையான வளர்ச்சியை அடைவதற்கு சமமான கார்பன் மற்றும் மேம்பாட்டு இடத்தை அவர்கள் அணுக வேண்டும்.
பருவநிலை நடவடிக்கை என்று வரும்போது இந்தியா பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி செயல்திறன், காடு வளர்ப்பு, எரிசக்தி சேமிப்பு, மிஷன் லைஃப் போன்ற பல்வேறு துறைகளில் நமது சாதனைகள் பூமித் தாயின் மீதான நமது மக்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
காலநிலை நிதி, பசுமைக் கடன் முன்முயற்சி மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட சிறப்பு அமைப்புகளில் சேர நான் ஆவலாக உள்ளேன்.
துபாயில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கிடையே சில தலைவர்களை சந்தித்து, உலகளாவிய பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பையும் நான் எதிர்நோக்குகிறேன்.