வணக்கம் நண்பர்களே!
சந்திரயான்-3- நிலவுப் பயண வெற்றியால், நமது மூவர்ணக் கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறக்கிறது. சிவசக்தி புள்ளி புதிய உத்வேகத்தின் மையமாக மாறியுள்ளது, மேலும் திரங்கா புள்ளி நம்மை பெருமையால் நிரப்புகிறது. உலகில் இத்தகைய சாதனைகள் நிகழும்போது, அவை நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து காணப்படுகின்றன. இந்த திறனை உலகிற்குக் காட்டும்போது, அது இந்தியாவின் வாயிலுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. ஜி 20 மாநாட்டின் வரலாறு காணாத வெற்றி, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்றது, சிந்தனை அமர்வுகள், உண்மையான உணர்வில் கூட்டாட்சி கட்டமைப்பின் வாழ்க்கை அனுபவம், ஜி 20 என்பதே நமது பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஜி 20 அமைப்பில் உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பதில் இந்தியா எப்போதும் பெருமை கொள்ளும். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் உரிமை மற்றும் ஒருமித்த ஜி20 பிரகடனம் போன்ற முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் குறிக்கின்றன.
சர்வதேச மாநாட்டு மையமான யசோபூமி நேற்று, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் விஸ்வகர்மா சமூகத்தின் பாரம்பரிய திறன்களைக் கொண்டாடும் விஷ்வகர்மா ஜெயந்தியும் நேற்று கொண்டாடப்பட்டது. புதிய அணுகுமுறையுடன் கூடிய பயிற்சி, நவீனக் கருவிகள் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை இந்தியாவின் விஸ்வகர்மா திறன்களை மேம்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்கின்றன. இந்நிகழ்வுகள் கொண்டாட்டம், உற்சாகம் மற்றும் நம்பிக்கையின் சூழலை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள நம் அனைவரிடமும் ஒரு புதிய தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த புதிய சூழலில், இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு குறுகிய அமர்வாக இருக்கலாம், ஆனால் வரலாற்று முடிவுகளின் அடிப்படையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 75 ஆண்டுளாக இந்தப் பயணம் தற்போது அடைந்துள்ள நிலை மிகவும் ஊக்கமளிக்கும் தருணம். இப்போது அந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, 2047 ஆம் ஆண்டில் புதிய உறுதியுடனும், புதிய ஆற்றலுடனும், புதிய நம்பிக்கையுடனும், கால எல்லைக்குள்ளும் இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து முடிவுகளும் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் எடுக்கப்படும். எனவே, இந்தக் கூட்டத்தொடர் பல வழிகளில் முக்கியமானது.
மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் குறுகிய அமர்வை உற்சாகத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாதங்களையும் மற்றும் எதிர் வாதங்களையும் செய்ய போதுமான நேரம் உள்ளது. வாழ்க்கையின் சில தருணங்கள் நம்மில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நிரப்புகின்றன. இந்தக் குறுகிய அமர்வை நான் அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். பழைய எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நாம் அனைவரும் சிறந்த நோக்கங்களுடன் புதிய பாராளுமன்றத்திற்குள் நுழைவோம் என்று நான் நம்புகிறேன், மேலும் புதிய நாடாளுமன்றத்தில் மாண்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் எந்த முயற்சியையும் கைவிட மாட்டோம். மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டிய முக்கியமான தருணம் இது.
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தடைகளை நீக்கும் கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். இனி இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் எந்த தடையும் இருக்காது. இந்தியா அனைத்து கனவுகளையும் தீர்மானங்களையும் தடையற்ற முறையில் நிறைவேற்றும். எனவே, விநாயகர் சதுர்த்தி நாளில், இந்த புதிய தொடக்கம் இந்தியாவின் அனைத்து கனவுகளையும் நனவாக்க உதவும். அதனால்தான் இந்த அமர்வு குறுகியகால கூட்டத் தொடராக இருக்கலாம், ஆனால் அது மிகவும் மதிப்பு வாய்ந்தது.
மிகவும் நன்றி.