மாண்புமிகு தலைவர்களே,
இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
எனது நண்பர் அதிபர் திரு பைடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று, நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டோம்.
இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள ஊடகமாக வரும் காலங்களில் இது மாறும்.
இது உலகளாவிய இணைப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு நிலையான திசையை வழங்கும்.
இந்த முன்முயற்சி குறித்து
மேதகு அதிபர் பைடன்.
இளவரசர், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான்,
மாண்புமிகு அதிபர் ஷேக் முகமது பின் சயீத்,
மேதகு அதிபர் மக்ரோன்,
மேதகு அதிபர் ஷோல்ஸ்,
மேதகு பிரதமர் மெலோனி,
மேதகு அதிபர் வான் டெர் லேயன்
ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
நண்பர்களே,
வலுவான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தள தூண்களாக செயல்படுகின்றன.
இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் இந்த துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.
இது தவிர, முன்னெப்போதும் இல்லாத அளவு முதலீடு, சமூகம், டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த உள்கட்டமைப்பை நோக்கி செலுத்தப்படுகிறது.
இந்த முயற்சிகள் மூலம், வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்.
உலகளாவிய வளரும் நாடுகளின் பல நாடுகளில் ஒரு நம்பகமான கூட்டாளியாக, எரிசக்தி, ரயில்வே, நீர், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் பல துறைகளில் உள்கட்டமைப்பு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
இந்த முயற்சிகள் முழுவதிலும், தேவை சார்ந்த மற்றும் வெளிப்படையான அணுகுமுறைக்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டாண்மை மூலம், உலகளாவிய வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதில் நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.
நண்பர்களே,
பிராந்திய எல்லைகளினால் இந்தியா இணைப்பை அளவிடுவதில்லை.
அனைத்து பகுதிகளுடனும் இணைப்பை அதிகரிப்பது, இந்தியாவின் முக்கிய முன்னுரிமையாகும்.
பரஸ்பர வர்த்தகம் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் அதிகரிப்பதற்கான ஆதாரமாக இணைப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
இணைப்பு முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் போது, சில அடிப்படை கொள்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது அவசியம்:
சர்வதேச விதிமுறைகள், விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்குதல் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல், கடன் சுமைக்கு பதிலாக நிதி நம்பகத்தன்மையை ஊக்குவித்தல், அனைத்து சுற்றுச்சூழல் அளவுருக்களையும் பின்பற்றுதல்.
இன்று, இணைப்புக்கான ஒரு பெரிய முயற்சியை நாம் எடுக்கும்போது, வரும் தலைமுறையினரின் கனவுகளை விரிவுபடுத்துவதற்கான விதைகளை நாம் விதைக்கிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத்துறப்பு - இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.