கயானா குடியரசின் அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி அவர்களே, பப்புவா நியு கினியா பிரதமர் திரு ஜேம்ஸ் மராப்பே அவர்களே, , மாலத்தீவுகள் நாடாளுமன்ற சபாநாயகர் திரு. முகமது நஷீத் அவர்களே, ஐ.நா தலைமை துணை செயலர் திருமிகு அமினா ஜே முகமது அவர்களே, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களே, மதிப்புமிகு விருந்தினர்களே, அனைவருக்கும் வணக்கம்.
உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டில் உரையாற்றுவது குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நிகழ்காலத்துக்கும், வருங்காலத்துக்கும் மிகவும் அவசியமான, இது போன்ற உலக தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் தருணத்தை நீடித்துள்ள எரிசக்தி வளங்கள் நிறுவனம் டிஇஆர்ஐ –க்கு எனது வாழ்த்துகள்.
நண்பர்களே, வருங்காலத்துக்கு முக்கியமான, மனித குலத்தின் பயண முன்னேற்றத்தை வரையறுப்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது அம்சம் நமது மக்களின் சுகாதாரம், இரண்டாவது நமது கோளத்தின் சுகாதாரம். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். நமது கோளத்தின் ஆரோக்கியம் குறித்து பேசுவதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம். நாம் சந்திக்கும் சவாலின் அளவு என்ன என்பதை பெரும்பாலும் அனைவரும் அறிவீர்கள். ஆனால், இந்த சவாலை மரபு அடிப்படையிலான அணுகுமுறையால் சமாளிக்க முடியாது. நீடித்த வளர்ச்சிக்கு உழைப்பதும், இளைஞர்கள் குறித்து சிந்திப்பதும் தான் இப்போதைய அவசிய தேவையாகும்.
நண்பர்களே, பருவநிலை மாறத்துக்கு எதிரான போராட்டப் பாதையில், பருவநிலை நீதி என்பது மிகவும் அவசியமாகும். இதற்கு நம்பிக்கையான தொலைநோக்கும், ஏழைகள் மீதான பெரும் கருணையும் தேவை. வளரும் நாடுகள் முன்னேறுவதற்கு அதிக கவனம் செலுத்துவதும் பருவநிலை நீதியில் அடங்கும். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, கடமைகளை கூட்டு முயற்சியில் மேற்கொண்டால், பருவநிலை நீதியை அடைய முடியும்.
நண்பர்களே, உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயாராக உள்ளது. பாரிசில் தெரிவித்த இலக்குகள், உறுதிப்பாட்டை விட மிஞ்சி நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். உமிழ்வு அடர்த்தியை 2005 அளவிலிருந்து 33 ஜிடிபியிலிருந்து 35 சதவீதமாக்க உறுதி பூண்டுள்ளோம். இதில் ஏற்கனவே 24 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
நண்பர்களே, மரபு சார்ந்த எரிசக்தி வளம் அல்லாத 40 சதவீத மின்சார உற்பத்தி நிறுவு திறனை உருவாக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த நிறுவ திறன் 38 சதவீதமாக வளர்ந்துள்ளது. இதில் அணுசக்தி மற்றும் பெரிய நீர் மின்திட்டங்கள் அடங்கும். நில தரம் குறித்த விஷயத்தில் இந்தியா உறுதியான முன்னேற்றம் அடைந்து வருவதில் நான் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளேன். 2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஐம்பது ஜிகாவாட் திறனை உருவாக்கும் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம். இதில் தனியார் துறையினரின் பங்கு அபரிமிதமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனால் பயன்பாட்டையும் இந்தியா அதிகரித்து வருகிறது.
நண்பர்களே, சமமான அணுகுமுறை இல்லாவிட்டால், நீடித்த வளர்ச்சி முழுமையடையாது. இந்த விஷயத்திலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 2019 மார்ச்சில், இந்தியா அநேகமாக 100 சதவீத மின்மயமாக்கலை எட்டியது. நீடித்த தொழில்நுட்பம், புதுமையான மாதிரிகளால், இந்த இலக்கை இந்தியா அடைந்தது. உஜாலா திட்டத்தின் மூலம், 67 மில்லியன் எல்இடி பல்புகள் மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஆண்டுக்கு 38 மில்லியன் டன் கரியமில வாயுவைக் குறைத்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் மூலம் 34 மில்லியன் வீடுகளுக்கு 18 மாதத்தில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வலா திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 80 மில்லியன் வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தொகுப்பில் இயற்கை வாயுவின் பங்கை 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக்க நாங்கள் உழைத்து வருகிறோம்.
நண்பர்களே, மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் குறித்த கவனம் இதற்கு அவசியமாகும். பேரிடர் விரிதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டுறவின் ஒரு பகுதியாக, நாம் இந்த திசையில் பாடுபட்டு வருகிறோம். மேலும் நீடித்த வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்ய இந்தியா தயாராக உள்ளது. எங்களது மனித நலன் சார்ந்த அணுகுமுறை, உலக நலனுக்கு பல மடங்கு ஆற்றலை வழங்கக்கூடும். இதில், டிஇஆர்ஐ போன்ற அமைப்புகளின் முயற்சிகள் முக்கியமாகும்.
இந்த உச்சிமாநாடு வெற்றியடைய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!