மரியாதைக்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாம் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேற்றத்தை அடையும் என்று நான் நம்புகிறேன்.
மரியாதைக்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
சிங்கப்பூர் இந்தியாவுக்கு வெறுமனே ஒரு நட்பு நாடு மட்டுமல்ல; இது ஒவ்வொரு வளரும் நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவுக்குள் பல 'சிங்கப்பூர்'களை உருவாக்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த இலக்கை நோக்கி நாம் ஒத்துழைத்து செயல்படுகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் ஏற்படுத்தியுள்ள அமைச்சர்கள் அளவிலான வட்டமேஜை மாநாடு ஒரு முன்னோடி அமைப்பாகும்.
திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல், நகர்வு, மேம்பட்ட உற்பத்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், நிலைத்தன்மை, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
எங்களது கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. ஜனநாயக மாண்புகளின் மீதான நமது பகிரப்பட்ட நம்பிக்கை நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கிறது. எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வருகை தரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நெருங்கிய ஒத்துழைப்பு பத்தாண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது வர்த்தகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. பரஸ்பர முதலீடு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 150 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. யுபிஐ கட்டண வசதியை நாங்கள் அறிமுகப்படுத்திய முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரின் 17 செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. நமது ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டிலிருந்து பாதுகாப்புத் துறை வரை வேகம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா இடையேயான ஒப்பந்தம் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இன்று, நாம் ஒன்றாக இணைந்து நமது உறவை விரிவான உத்திசார் ஒத்துழைப்பாக உயர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரியாதைக்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
சிங்கப்பூரில் வசிக்கும் 3.5 லட்சம் இந்திய வம்சாவளியினர் நமது நல்லுறவின் வலுவான அடித்தளமாக உள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ், ஆசாத் ஹிந்த் ஃபௌஜ், லிட்டில் இந்தியா ஆகியவை சிங்கப்பூரில் கௌரவத்தைப் பெற்றதற்காக ஒட்டுமொத்த சிங்கப்பூருக்கும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
2025-ம் ஆண்டில், நமது உறவு அதன் 60-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும். இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் முதல் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் சிங்கப்பூரில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மையான மொழியான தமிழில் உலகிற்கு வழிகாட்டும் சிந்தனைகளை வழங்கியவர் மாபெரும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஆவார். அவரது படைப்பான திருக்குறள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இருப்பினும் அதன் கருத்துக்கள் இன்றும் பொருத்தமாக உள்ளன. அதில் அவர் கூறியிருக்கும் ஒரு குறள்:
நயனொடு நன்றி புரிந்து பயனுடையர் பண்பு பாராட்டட்டும் உலகு.
இதன் பொருள்: "நீதியையும் அறத்தையும் போற்றி மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களை உலகம் போற்றும்." என்பதாகும்.
சிங்கப்பூரில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களும் இந்த சிந்தனைகளால் உத்வேகம் பெற்று, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
மரியாதைக்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
சிங்கப்பூரில் ஷாங்ரி-லா பேச்சுவார்த்தையில் இந்தியாவின் இந்தோ-பசிபிக் பார்வையை முன்வைத்தேன். பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்த சிங்கப்பூருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். எனக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்கும், அன்பான உபசரிப்புக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.