மேதகு தலைவர்களே,
வணக்கம்!
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.
புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் மக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள், பிரேசில் தலைமை வகித்தபோது முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கு நாம் முன்னுரிமை அளித்தோம் என்பது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் மற்றும் இளைஞர் சக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம்.
மற்றும் உலகளாவிய தெற்கின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு சிறகுகள் வழங்கப்பட்டன.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொருத்தமானது என்பது தெளிவாகிறது.
நண்பர்களே,
முதல் அமர்வின் கருப்பொருள் தொடர்பாக, இந்தியாவின் அனுபவங்கள் மற்றும் வெற்றிக் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் 250 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.
800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 550 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட 60 மில்லியன் மூத்த குடிமக்களும் இலவச சுகாதார காப்பீட்டின் மூலம் பயனடைய முடியும்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 300 மில்லியனுக்கும் அதிகமான பெண் குறுந்தொழில்முனைவோருக்கு வங்கிகளுடன் இணைக்கப்பட்ட கடன் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 40 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பலன்களைப் பெற்றுள்ளனர்.
விவசாயிகள் நலத்திட்டத்தின் கீழ், 110 மில்லியன் விவசாயிகளுக்கு 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனக் கடன் வழங்கப்படுகிறது.
இந்தியா உணவுப் பாதுகாப்பை மட்டும் உறுதி செய்யவில்லை, ஊட்டச்சத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டமான சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 பிரச்சாரம், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துகிறது.
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
உலகளாவிய உணவு பாதுகாப்பிலும் இந்தியா தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
நண்பர்களே,
"பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி" என்ற பிரேசிலின் முன்முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இது, புதுதில்லி உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான உயர்மட்டக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கியமான முயற்சியாகும்.
நண்பர்களே,
இறுதியாக, சர்வதேச நிலையிலான மோதல்களால் ஏற்படும் உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடியால் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்று நான் கூற விரும்புகிறேன்.
எனவே, உலகளாவிய தெற்கின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொண்டால் மட்டுமே நமது விவாதங்கள் வெற்றிகரமாக இருக்கும்.
புதுதில்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி-20 அமைப்புக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கியதன் மூலம் உலகின் தெற்கின் குரலை நாம் வலுவூட்டியதைப் போல, உலகளாவிய ஆளுகைக்கான அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம்.
மிக்க நன்றி.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: