மணிப்பூரின் இம்பாலில் இன்று நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு இந்த சிந்தனை முகாம் மணிப்பூரில் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாடுக்காக கோப்பைகளை வென்று மூவர்ணக் கொடியின் புகழை மேலும் உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப் பகுதியின் உள்ளூர் விளையாட்டுகளான சாகோல் கஞ்சாய், தங்-டா, யூபி லக்பி, முக்னா மற்றும் ஹியாங் தன்பா போன்றவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர் இவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். உள்ளுர் விளையாட்டுக்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், மணிப்பூரின் ஊ-லவாபி விளையாட்டு கபடியைப் போன்று தன்மையுள்ளது என்று கூறினார். இதேபோல் ஹியாங் தன்னபா விளையாட்டு கேரள மாநிலத்தில் நடத்தப்படும் படகுப் போட்டியை போன்றது என்று அவர் தெரிவித்தார். போலோ எனப்படும் குதிரையேற்றத்துடன் மணிப்பூர் மாநிலம் வரலாற்று ரீதியிலான நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். சிந்தனை முகாமின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த ஒரு சிந்தனை முகாமும் சிந்தனைகளில் தொடங்கி ஆலோசனைகளின் மூலம் தொடரப்பட்டு செயலாக்கத்தில் நிறைவடைகிறது என்று சிந்தனை முகாம்கள் தொடர்பான கருத்தை பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்கால இலக்குகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் முந்தைய மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் செயலாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 2022-ம் ஆண்டு கெவாடியாவில் நடைபெற்ற முந்தையக் கூட்டத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதில் பல முக்கியமான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் நாட்டின் விளையாட்டு சூழல் அமைப்பை மேலும் சிறந்ததாக மாற்றியமைப்பது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். விளையாட்டுத்துறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பின் அதிகரிப்பு குறித்து பேசிய அவர், இதன் மூலம் சிறந்த முன்னேற்றங்கள் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டார். இந்த ஆய்வுகள், கொள்கை மற்றும் திட்டங்கள் என்ற அளவில் மட்டும் எடுத்துச் செல்லப்படாமல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முந்தைய ஆண்டு சாதனைகள் என்பதன் அடிப்படையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்திய தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனைப்படைத்ததைப் பாராட்டியப் பிரதமர், அவர்களது இந்த சாதனையைக் கொண்டாடும் வேளையில், நிதியுதவிகளையும், பரிசுகளையும் வழங்கி ஆதரவுக் கரம் நீட்டுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். உலகப்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, ஆசியான் சாம்பியன் கோப்பை ஹாக்கி, ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அனைத்து துறைகளும், வழிவகை செய்து கொடுத்திருப்பதை நினைவு கூர்ந்தார். மேலும் வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைகளை செய்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதையும், சோதனைகளால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து வீரர்களை மீட்பதற்கு மாறுப்பட்ட அணுகுமுறையை அனைத்து அமைச்சகங்களும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிக்குமென விதவிதமான யுக்திகளை கையாள வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், கால்பந்தாக இருந்தாலும் சரி, ஹாக்கியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு போட்டியின் சூழலுக்கேற்ற வகையில், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியப் பிரதமர், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
உடல் தகுதி என்பது விளையாட்டு வீரருக்கானது என்பதோடு மட்டுமல்லாமல், போட்டிகளில் சிறப்பாக செயல்பட அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது என்றார். விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை உள்ளூர் விளையாட்டுகளில் அதிகளவில் பங்கேற்பதன் மூலம், போட்டிக்கான பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதே நேரத்தில், எந்தவொரு வீரரின் விளையாட்டுத்திறமையையும் நிராகரிக்கப்படவில்லை என்பதை விளையாட்டு அமைச்சகம் உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு திறமையான விளையாட்டு வீரருக்கும், தரமான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார். கேலோ இந்தியா திட்டம் குறித்துப் பேசிய அவர், மாவட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை இந்தத் திட்டம் நிச்சயம் மேம்படுத்தும் என்று கூறினார். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானது என்று தெரிவித்தார். தேசிய இளைஞர் திருவிழா என்பது, மாநில அளவில் வெறும் சம்பிரதாயமாக நடத்தப்படாமல், இளைஞர்களின் திறமைகளை வெளிகொண்டு வருவதற்கான வாய்ப்பாக மாற்றப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியப் பிரதமர், எல்லா விளையாட்டுக்களிலும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் போது, இந்தியா தன்னை ஒரு முன்னணி விளையாட்டு நாடாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், வடகிழக்கு மண்டலம், தேசத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். ரூ.400 கோடி மதிப்பிலான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், தற்போது வடகிழக்கு மாநிலங்களை மேம்பாட்டிற்கான புதிய திசையில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் கூறினார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கித் தரும் என நம்பிக்கைத் தெரிவித்த பிரதமர், இதற்கு, கேலோ இந்தியா திட்டம், ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறினார். வடகிழக்கு மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கேலோ இந்தியா மையங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் கேலோ இந்தியா மாநில மையம் ஆகியவை உருவாக்கப்படும் என்று அறிவித்த பிரதமர், இந்த முயற்சிகள், விளையாட்டு உலகத்தில் புதிய இந்தியாவிற்கான அடித்தளமாக அமையும் எனவும் நாட்டிற்கு புதிய அடையாளத்தைத் தரும் எனவும் கூறினார். இந்த முயற்சிகளை வேகமாக செயல்படுத்த அனைத்து மாநிலங்களின் துறை சார்ந்த வல்லுநர்களும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டப் பிரதமர், இதற்கு சிந்தனை முகாம்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
இந்த இரண்டு நாள் சிந்தனை முகாம்களில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இளைஞர் விவகாரத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்துகொண்டு தேசத்தை விளையாட்டுத்துறையில் தகுதி மிக்கதாக மாற்றுவதற்கான தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதுடன், உலகில் விளையாட்டுத்துறையில் சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான கருத்துக்களையும் பதிவு செய்வர். மேலும் தனி நபர் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான அம்சங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதுடன், தேசத்தைக் கட்டி எழுப்பும் நடவடிக்கைகளில் இளைஞர் தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் தனிநபர் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.