மேதகு தலைவர்களே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மூன்று நாள் மாநாட்டில் இருந்து பல சாதகமான முடிவுகள் வெளிவந்துள்ளன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் விரிவாக்கம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம்.
நான் நேற்று குறிப்பிட்டது போல, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியா எப்போதும் முழு ஆதரவு அளித்து வருகிறது.
புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது பிரிக்ஸ் அமைப்பை ஒரு அமைப்பாக வலுப்படுத்துவதுடன், நமது கூட்டு முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று இந்தியா எப்போதும் நம்புகிறது.
இந்த நடவடிக்கை பல துருவ உலக ஒழுங்கின் மீது உலகின் பல நாடுகளின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.
விரிவாக்கத்திற்கான வழிகாட்டும் கொள்கைகள், தரநிலைகள், அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து நமது குழுக்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இவற்றின் அடிப்படையில், இன்று அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிக்ஸ் அமைப்பில் வரவேற்க ஒப்புக் கொண்டுள்ளோம்.
முதலாவதாக, இந்த நாடுகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாடுகளுடன் இணைந்து, நமது ஒத்துழைப்பை புதிய வேகத்துடனும் ஆற்றலுடனும் புகுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.
இந்த அனைத்து நாடுகளுடனும் இந்தியா ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் உதவியுடன், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களைச் சேர்ப்போம்.
பிரிக்ஸ் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளை, நட்பு நாடுகளாக வரவேற்க ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் இந்தியா பங்களிக்கும்.
நண்பர்களே,
பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை அனுப்புகிறது.
இது இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பிற உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய ஒரு முன்முயற்சியாகும்.
நண்பர்களே,
இப்போதுதான், எனது நண்பர் அதிபர் ரமஃபோசா இந்தியாவின் நிலவு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார், நான் நேற்று முதல் இதை அனுபவித்து வருகிறேன்; அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
உலகெங்கிலும், இந்த சாதனை ஒரு நாட்டின் வெற்றியாக மட்டும் அங்கீகரிக்கப்படாமல், மாறாக மனித இனத்திற்கான குறிப்பிடத்தக்க வெற்றியாக அங்கீகரிக்கப்படுகிறது.
இது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையான விஷயம், மேலும் இது முழு உலகத்தின் சார்பாக இந்திய விஞ்ஞானிகளை பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
நண்பர்களே,
நேற்று மாலை, இந்தியா தனது சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்தை அடைந்தது.
இந்த சாதனை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
இந்தியா தனது இலக்கை நிர்ணயித்த பகுதியில், இதற்கு முன்பு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. எனவே, அறிவியலால் நம்மை மிகவும் கடினமான நிலப்பரப்பிற்கு அழைத்துச் செல்ல முடிந்தது.
இது அறிவியலுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மிகப் பெரிய சாதனையாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், எனக்காகவும், இந்தியாவுக்காகவும், இந்திய விஞ்ஞானிகளுக்காகவும், உலகளாவிய அறிவியல் சமூகத்திற்காகவும் வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகின்றன. என் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும், விஞ்ஞானிகள் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் பகிரங்கமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.