மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று நியமனக் கடிதங்களைப் பெறுபவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளனர் என்று கூறினார். நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பின் முக்கியப் பங்கை விவரிக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், இன்று வேலை பெறுபவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து, அவர்களை நவீனமயமாக்கி, அவர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கும் பொறுப்பை வகிப்பார்கள் என்று சுட்டிக் காட்டினார். இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் இன்று மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதமர், இந்த சாதனைக்காக மாநில அரசைப் பாராட்டினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதில் பெரும் பங்களிப்பைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் புதிய பணிநியமனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பத்திற்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடக்கக் கல்வித் துறையிலும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தாய்மொழிக் கல்வி தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்காததால் ஏற்படும் பெரும் அநீதியை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசு இப்போது பாடத்திட்டத்தில் பிராந்திய மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது நாட்டின் கல்வி முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கு அடிப்படையாக மாறும் என்றும் தெரிவித்தார்.
"நேர்மறையான சிந்தனை, சரியான நோக்கம் மற்றும் முழு ஒருங்கிணைப்புடன் முடிவுகள் எடுக்கப்படும்போது, முழு சூழலும் நேர்மறையுடன் முழுமையடையும்" என்று குறிப்பிட்ட பிரதமர், அமிர்தகாலத்தில் முதல் ஆண்டில் வந்த இரண்டு நேர்மறையான செய்திகளை எடுத்துரைத்தார், அதாவது வறுமையைக் குறைத்தல் மற்றும் நாட்டில் செழிப்பை அதிகரித்தல் ஆகியவையாகும். முதலாவதாக, நித்தி ஆயோக்கின் அறிக்கையின்படி வெறும் 5 ஆண்டுகளில், இந்தியாவில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். இரண்டாவதாக, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளின் எண்ணிக்கைக் குறித்த மற்றொரு அறிக்கையை பிரதமர் எடுத்துரைத்தார். இது கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும், வருமானவரித் தாக்கல் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் சுமார் ரூ.4 லட்சமாக இருந்த சராசரி வருமானம் 2023 ஆம் ஆண்டில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் இருந்து உயர் வருவாய்ப் பிரிவினருக்கு மாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். இந்தப் புள்ளிவிவரங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதையும், நாட்டின் ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்துவதையும் உறுதிசெய்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வருமான வரித் தாக்கல்களின் புதிய புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட பிரதமர், தங்கள் அரசின் மீது நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினார். இதன் காரணமாக, குடிமக்கள் தங்கள் வரியின் ஒவ்வொரு பைசாவும் நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதை அறிந்துள்ளதால், நேர்மையாக தங்கள் வரிகளை செலுத்த அதிக எண்ணிக்கையில் முன்வருவதாகவும், 2014 க்கு முன்பு 10 வது இடத்தில் இருந்த பொருளாதாரம் தற்போது 5 வது இடத்தை எட்டியுள்ளது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறைகேடுகள் மற்றும் ஊழல்களால் சீரழிந்த சகாப்தத்தை நாட்டின் குடிமக்கள் மறக்க முடியாது என்றும், அங்கு ஏழைகளின் உரிமைகள் அவர்களை அடைவதற்கு முன்பே பறிக்கப்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "இன்று, ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணமும் நேரடியாக அவர்களின் கணக்கை சென்றடைகிறது", என்று பிரதமர் மேலும் கூறினார்.
அமைப்பில் இருந்து தேவையற்ற செலவினங்களை தவிர்த்ததன் விளைவாக, ஏழைகளின் நலனுக்கான செலவினங்களை அதிகரிக்க அரசுக்கு உதவியது என்று அவர் குறிப்பிட்டார். இவ்வளவு பெரிய அளவில் செய்யப்பட்ட முதலீடு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய அவர், பொது சேவை மையத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் கிராமங்களில் 5 லட்சம் புதிய பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மையங்கள் அனைத்தும் இன்று பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இது ஏழைகள் மற்றும் கிராமங்களின் நலனையும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் குறிக்கிறது", என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொலைநோக்குக் கொள்கைகள் மற்றும் முடிவுகளுடன் இன்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் வலியுறுத்தினார். சுதந்திர தினத்தன்று தனது உரையின் போது செங்கோட்டையில் இருந்து பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் அறிவிப்பை குறிப்பிட்டப் பிரதமர், விஸ்வகர்மாக்களின் பாரம்பரிய திறன்களை 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க பிரதமர் விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதற்காக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், இது 18 வகையான திறன்களுடன் தொடர்புடையவர்களுக்கு பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார். இத்திட்டம் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு பயனளிக்கும் என்று பிரதமர்
சுட்டிக் காட்டினார். முன்னதாக கடந்த காலங்களில் அவர்களுடைய முன்னேற்றத்திற்காக இதுவரை எந்தஒரு முயற்சியும் எடுக்கப்படாத நிலையில், அவர்களுக்கான முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், பயிற்சியுடன் நவீனக் கருவிகள் வாங்க பயனாளிகளுக்கு உத்தரவாத ரொக்கச்சீட்டு வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். "பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார்.
தமது உரையின் நிறைவாகப் பேசிய பிரதமர், இன்று ஆசிரியர்களாக இருப்பவர்கள் கடின உழைப்பின் மூலம் இங்கு வந்துள்ளதாகவும், கற்றல் செயல்முறையைத் தொடருமாறும் வலியுறுத்தினார். அரசால் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளமான ஐ.ஜி.ஓ.டி கர்மயோகியை சுட்டிக்காட்டிய அவர், மேலும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.