அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023 நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023-ல் பங்கேற்பவர்களுடன் இணைவது ஒரு சிறப்பு உணர்வு என்று கூறினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு நூற்றாண்டு பதக்கங்களை வென்றுள்ளதால் இந்த மாதம் நாட்டின் விளையாட்டுக்கு உகந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அமேதியைச் சேர்ந்த பல வீரர்களும் இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்தப் போட்டியின் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்துள்ள புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் உணர முடியும் என்றும், இந்த உற்சாகத்தைக் கையாண்டு சிறந்த முடிவுகளுக்குத் தயார்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். "கடந்த 25 நாட்களில் நீங்கள் பெற்ற அனுபவம் உங்கள் விளையாட்டு வாழ்க்கைக்கு பெரிய சொத்து" என்று பிரதமர் கூறினார்.
ஆசிரியர், பயிற்சியாளர், பள்ளி அல்லது கல்லூரி பிரதிநிதி என இந்த மகத்தான இயக்கத்தில் இணைந்து இந்த இளம் வீரர்களை ஆதரித்த மற்றும் ஊக்குவித்த ஒவ்வொரு நபரையும் அவர் பாராட்டினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒன்று கூடுவது ஒரு பெரிய விஷயம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய அமேதி எம்.பி ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
" விளையாட்டும் விளையாட்டு வீரர்களும் மேம்பாடு அடைவதே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முக்கியமானது" என்று பிரதமர் கூறினார். இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு விளையாட்டின் மூலம் இயற்கையான முறையில் நிகழ்கிறது, அவர்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்கிறார்கள், தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சி செய்கிறார்கள், அணியில் சேருவதன் மூலம் முன்னேறுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தற்போதைய அரசின் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் வகுத்துள்ளனர் என்றும், அதன் விளைவுகள் வரும் ஆண்டுகளில் தெளிவாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமேதியின் இளம் வீரர்கள் வரும் ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்வார்கள் என்றும், இதுபோன்ற போட்டிகளிலிருந்து பெறும் அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
"வீரர்கள் களத்தில் நுழையும்போது, அவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது – தங்களையும், அணியையும் வெற்றி பெறச் செய்வது". ஒட்டுமொத்த நாடும் இன்றைய வீரர்களைப் போலவே நாட்டிற்கே முதலிடம் என்று சிந்திக்கிறது என்றார். வீரர்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு மோடி, அவர்கள் எல்லாவற்றையும் பணயம் வைத்து நாட்டுக்காக விளையாடுகிறார்கள், இந்த நேரத்தில் நாடும் ஒரு பெரிய இலக்கைப் பின்பற்றுகிறது என்றார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதற்காக, ஒவ்வொரு துறையும் ஒரே உணர்வு, ஒரே குறிக்கோள் மற்றும் ஒரே தீர்மானத்துடன் முன்னேற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இளைஞர்களுக்கான டாப்ஸ் மற்றும் கேலோ இந்தியா விளையாட்டுகள் போன்ற திட்டங்களை அவர் குறிப்பிட்டார். டாப்ஸ் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்குக் கேலோ இந்தியா விளையாட்டுகளின் கீழ் மாதத்திற்கு ரூ.50,000 உதவி வழங்கப்படுகிறது, இது பயிற்சி, உணவு, பயிற்சிக்கான உபகரணங்கள், பிற செலவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மாறிவரும் இன்றைய இந்தியாவில், சிறு நகரங்களைச் சேர்ந்த திறமைசாலிகள் வெளிப்படையாக முன் வருவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவை ஒரு ஸ்டார்ட்அப் மையமாக மாற்றுவதில் சிறு நகரங்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இன்றைய உலகில் பல புகழ்பெற்ற விளையாட்டுத் திறமையாளர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் முன்வந்து தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் வகையில் அரசின் வெளிப்படையான அணுகுமுறை திகழ்வதற்குப் பாராட்டு தெரிவித்தார்.
பதக்கங்களை வென்ற பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியை சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டு வீரர்களின் திறமையை மதித்து அனைத்து வசதிகளையும் அரசு வழங்கியதன் விளைவை இன்று காண முடிகிறது என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அன்னு ராணி, பாருல் சௌத்ரி, சுதா சிங் ஆகியோரின் செயல்திறன்கள் அதற்கு உதாரணமாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார். அத்தகைய திறமையான நபர்களைக் கண்டறிந்து, நாட்டிற்காக அவர்களின் திறமைகளை மேம்படுத்த நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி ஒரு சிறந்த வழியாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உரையை நிறைவு செய்த பிரதமர், அனைத்து விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பும், வரும் காலங்களில் பலனைக் காட்டத் தொடங்கும் என்றும், பல விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கும் மூவர்ணக் கொடிக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.