அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
75 வது குடியரசு தின கொண்டாட்டங்களை தொடர்ந்து நடக்கும் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், "நமது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலான 75 வது குடியரசு தின விழா முடிந்த அடுத்த நாளே நடைபெறும் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது" என அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
அரசியலமைப்பு சபையிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, "நமது அரசியலமைப்பு சபையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பல்வேறு எண்ணங்கள், விஷயங்கள் மற்றும் கருத்துக்களுக்கு இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு இருந்தது, அவர்கள் அதற்கு ஏற்ப வாழ்ந்தனர்."
அரசியல் நிர்ணய சபையின் இலட்சியங்களில் இருந்து மீண்டும் உத்வேகம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மாநாட்டில் பங்கேற்றுள்ள சபாநாயகர்களின் பங்கை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "உங்கள் பதவிக்காலத்தில், ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்ல முயற்சி செய்யுங்கள் அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியமாக அமையும்" என்று அவர் கூறினார்.
சட்டமன்ற அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "விழிப்புடன் உள்ள மக்கள் ஒவ்வொரு பிரதிநிதியையும் ஆராயும் இன்றைய சூழ்நிலையில் சட்டமன்றங்கள் மற்றும் குழுக்களின் செயல்திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.
சட்டமன்ற அமைப்புகளுக்குள் ஒழுக்கத்தை பராமரிப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, "சபையில் உறுப்பினர்களின் நடத்தை மற்றும் அதில் உகந்த சூழல் ஆகியவை சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கின்றன. இந்த மாநாட்டில் இருந்து வெளிவரும் உறுதியான பரிந்துரைகள் சபையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் கருவியாக இருக்கும்.
சபையில் பிரதிநிதிகளின் நடத்தை சபையின் பிம்பத்தை தீர்மானிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். கட்சிகள் தங்கள் உறுப்பினர்களின் ஆட்சேபகரமான நடத்தைகளைக் மட்டுப்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் நடத்தைகளுக்கு ஆதரவு தருவது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இது நாடாளுமன்றத்துக்கோ, சட்டசபைக்கோ உகந்த சூழல் அல்ல என்றார்.
பொது வாழ்க்கையில் வளர்ந்து வரும் நெறிமுறைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொறுப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார். "கடந்த காலங்களில், சபையின் ஒரு உறுப்பினருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பொது வாழ்க்கையில் இருந்து அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். எவ்வாறாயினும், தண்டனை பெற்ற ஊழல் நபர்கள் பகிரங்கமாக புகழப்படுவதை இப்போது நாம் காண்கிறோம், இது நிர்வாகம், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும், "என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் விவாதித்து உறுதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான மாநாட்டின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைப்பதில் மாநில அரசுகள் மற்றும் அவற்றின் சட்டமன்றங்களின் முக்கிய பங்கை அங்கீகரித்த பிரதமர் மோடி, "இந்தியாவின் முன்னேற்றம் நமது மாநிலங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது. மாநிலங்களின் முன்னேற்றம் அவற்றின் வளர்ச்சி இலக்குகளை கூட்டாக வரையறுக்க அவற்றின் சட்டமன்ற மற்றும் நிர்வாக அமைப்புகளின் தீர்மானத்தைப் பொறுத்தது."
பொருளாதார முன்னேற்றத்திற்கான குழுக்களுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "உங்கள் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது முக்கியமானது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதை நோக்கி இந்த குழுக்கள் எவ்வளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமாக அரசு முன்னேறும்."
சட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தைப்பற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, தேவையற்ற சட்டங்களை ரத்து செய்வதில் மத்திய அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். "கடந்த பத்தாண்டுகளில், நமது அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நீதி அமைப்பின் இந்த எளிமைப்படுத்தல் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக்கியுள்ளது மற்றும் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது, "என்று அவர் கூறினார்.
தேவையற்ற சட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் குறித்து சபாநாயகர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, அவற்றை அகற்றுவது குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பெண்களின் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் நோக்கிலான ஆலோசனைகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார். "பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழுக்களில் விரிவுபடுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
அதேபோல், குழுக்களில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "நமது இளம் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும், கொள்கை வகுப்பதில் பங்கேற்கவும் அதிகபட்ச வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
நிறைவாக, பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டு சபாநாயகர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையில் முன்வைக்கப்பட்ட ஒரே நாடு-ஒரு சட்டமன்ற மேடை என்ற கருத்தை நினைவு கூர்ந்தார், மேலும் இ-விதான் மற்றும் டிஜிட்டல் சன்சாத் தளங்கள் மூலம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இந்த இலக்கை அடைய பணியாற்றி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.