இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்திருந்த செய்தி பகிரப்பட்டது. இந்தியாவின் சார்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல இணையமைச்சர் திருமிகு ஷோபா கரண்ட்லாட்ஜே, பிரதமரின் செய்தியை வாசித்தார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்முயற்சியின் காரணமாக 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு 2023- ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்தது.
மனிதர்கள் முதலில் பயிரிட்ட பயிர்களுள் சிறுதானியங்களும் அடங்கும் என்றும், அதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்திருப்பதாகவும் தமது செய்தியில் குறிப்பிட்ட பிரதமர், எதிர்கால உணவாக சிறுதானியங்களை மாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். “நூற்றாண்டில் ஒரு முறை நிகழும் பெருந்தொற்றும், அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சனைகளும் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றமும் உணவு இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதுபோன்ற சூழலில் சிறுதானியங்களுடன் சம்பந்தப்பட்ட உலகளாவிய இயக்கம் முக்கிய முயற்சியாக இருக்கும்”, என்று அவர் தெரிவித்தார்.
“நுகர்வோருக்கும், பயிரிடுவோருக்கும் பருவ நிலை பிரச்சனைக்கும் சிறுதானியங்கள் மிகச்சிறந்தது. நுகர்வோருக்கு தேவையான சமமான ஊட்டச்சத்து அதில் நிறைந்துள்ளது. குறைவான தண்ணீர் தேவைப்படுவதாலும், இயற்கை வேளாண்மைக்கு உகந்ததாக விளங்குவதாலும், அவற்றை பயிரிடுபவர்களும் பயனடைகின்றனர். நமது சுற்றுச்சூழலும் பெருமளவு பயனடைகிறது. ‘சிறுதானியங்களில் முழு கவனம் செலுத்தப்படுவது' குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். நிறுவனங்களும், தனி நபர்களும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, பாதுகாப்பான, நிலையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பெருந்திரள் இயக்கத்தின் தொடக்கமாக அமையும் என்று நான் நம்புகிறேன்”, என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தமது செய்தியில் தெரிவித்தார்.