துபாயில் நடைபெற்ற ஐநா பருவநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஐநா சபையின் பொதுச் செயலாளர் திரு அந்தோனியோ குட்டரெஸ்சை இன்று (2023, டிசம்பர் 01) சந்தித்தார்.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் போது ஐநா பொதுச்செயலாளர் வழங்கிய ஆதரவுக்காக அவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பருவநிலை இலக்குகளை அடைவதில் இந்தியாவின் முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
பருவநிலை நடவடிக்கைகள், பருவநிலை நிதி, தொழில்நுட்பம் போன்றவை, பலதரப்பு நிர்வாகம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நிலையான வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கைகள், பல்நோக்கு மேம்பாட்டு வங்கி சீர்திருத்தங்கள் மற்றும் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இந்தியாவின் முயற்சிகளை ஐநா பொதுச் செயலாளர் பாராட்டினார். பிரதமரின் பசுமைக் கடன் திட்டத்தை அவர் வரவேற்றார். இந்தியாவின் தலைமைத்துவப் பணிகளை 2024-ஆம் ஆண்டின் ஐநா உச்சிமாநாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் ஐநா பொதுச்செயலாளர் பிரதமரிடம் உறுதியளித்தார்.