குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறும் 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கிழக்கு தைமூரின் அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் ஹோர்டாவும் இன்று காந்திநகரில் சந்தித்துப் பேசினர். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்துள்ள அதிபர் ஹோர்டா மற்றும் அவரது குழுவினரைப் பிரதமர் அன்புடன் வரவேற்றார். துடிப்புமிக்க "தில்லி-திலி" இணைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 2023 செப்டம்பரில், கிழக்கு தைமூர் நாட்டில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். திறன் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம், எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட சுகாதாரம் ஆகியவற்றில் கிழக்குத் தைமூர் நாட்டுக்கு உதவி செய்ய பிரதமர் முன்வந்துள்ளார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐ.எஸ்.ஏ), பேரிடர் தணிப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சி.டி.ஆர்.ஐ) ஆகியவற்றில் சேர கிழக்குத் தைமூருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
கிழக்குத் தைமூரை, ஆசியான் அமைப்பில் 11-வது உறுப்பினராக இணைப்பதற்குக் கொள்கையளவில் முடிவு செய்ததற்காக அதிபர் ஹோர்டாவைப் பிரதமர் பாராட்டினார். மேலும் அது விரைவில் முழு உறுப்பினர் உரிமையைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்காகப் பிரதமருக்கு, அதிபர் ஹோர்டா நன்றி தெரிவித்தார். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்தில் சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ச்சி முன்னுரிமைகளைப் பூர்த்தி செய்வதில் அவர் இந்தியாவின் ஆதரவைக் கோரினார்.
பிராந்திய பிரச்சினைகள் மற்றும் இந்தோ-பசிபிக்கின் முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு அதிபர் ஹோர்டா ஆதரவு தெரிவித்துள்ளார். பன்னாட்டு அமைப்பில் தங்களின் சிறந்த ஒத்துழைப்பைத் தொடர தலைவர்கள் உறுதிபூண்டனர். உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் இரண்டு பதிப்புகளிலும் கிழக்குத் தைமூர் தீவிரமாகப் பங்கேற்றதைப் பிரதமர் பாராட்டினார். உலகளாவிய பிரச்சனைகளில் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவுக்கும், கிழக்குத் தைமூருக்கும் இடையிலான இருதரப்பு உறவு, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையின் பகிரப்பட்ட மதிப்புகளில் உறுதியாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டில் கிழக்குத் தைமூருடன் தூதரக உறவுகளை நிறுவிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
Had an excellent meeting with President @JoseRamosHorta1 of Timor-Leste. The fact that our meeting is taking place in Mahatma Mandir, Gandhinagar, makes this meeting even more special considering Gandhi Ji’s influence on President Horta’s life and work. We discussed ways to… pic.twitter.com/RYmCKKKyhm
— Narendra Modi (@narendramodi) January 9, 2024