எனது அருமை நாட்டுமக்களே!
வணக்கம்!
மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் இன்றுவரை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளோம். பொருளாதார நடவடிக்கைகளும், தற்போது படிப்படியாக முன்னேற்றம் அடைவது போல் தெரிகிறது. நமது கடமைகளைச் செய்யவும், வாழ்க்கைக்கு மீண்டும் உந்துதல் அளிக்கவும், நாம் ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறோம். இந்த பண்டிகை காலத்தில், சந்தைகளின் பரபரப்பு படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கிறது. முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், வைரஸ் தொற்று இன்னும் உள்ளதை, நாம் மறக்கக் கூடாது. கடந்த 7-8 மாதங்களில், ஒவ்வொரு இந்தியரின் முயற்சியுடன், ஏற்படுத்தப்பட்ட நிலையான சூழல், மோசமடைய நாம் அனுமதிக்கக் கூடாது. அதை நாம், மேலும் மேம்படுத்த வேண்டும்.
இன்று, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் அதிகரித்துள்ளது, உயிரிழப்போர் வீதம் குறைந்துள்ளது. இந்தியாவில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 5,500 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், இந்த எண்ணிக்கை 25,000 ஆக உள்ளது. இந்தியாவில் இறப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு 83 ஆக உள்ள நிலையில், அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை 600க்கும் அதிகமாக உள்ளது. வளமான உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில், இந்தியா வெற்றியடைந்து வருகிறது. நாட்டில், இன்று, கொரோனா நோயாளிகளுக்கு 90 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் உள்ளன. 12,000 தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளன. கொரோனா பரிசோதனைக்கு 2000 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. நாட்டில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 கோடியைக் கடக்கவுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பது மிகுந்த பலமாக இருந்து வருகிறது.
‘சேவா பர்மோ தர்மா’ என்ற மந்திரத்தைப் பின்பற்றி, நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் இதர முன்களப் பணியாளர்கள் மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்து வருகின்றனர். இந்த முயற்சிகளுக்கு இடையில், நாம் கவனக்குறைவுடன் இருப்பதற்கு, இது நேரமல்ல. இனிமேல் கொரோனா பரவாது, தற்போது கொரோனா அபாயம் இல்லை, என நினைப்பதற்கு இது நேரமல்ல. மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு, கவனக்குறைவுடன் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை நாம், சமீபகாலமாக பார்க்கிறோம். இது நல்லதல்ல. நீங்கள் கவனக்குறைவுடன், முககவசம் அணியாமல் வெளியே சென்றால், நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், கொரோனா பரவல் குறைந்து, பின்னர் திடீரென்று அதிகரித்ததை நினைவில் கொள்ளுங்கள்.
நண்பர்களே, ‘‘பயிர் முதிர்ச்சியடைந்ததை பார்க்கும்போது, அனைத்து பணிகளும் முடிந்து விட்டன என நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், அறுவடையாகி வீட்டுக்கு வரும்வரை, பணி முடிவடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது’’ என முனிவர் கபிர்தாஸ் ஜி கூறியுள்ளார். அதனால், வெற்றியடையும் வரை, கவனக்குறைவுடன் இருக்காதீர்.
நண்பர்களே,
தடுப்பூசி கிடைக்கும் வரை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை, நாம் பலவீனமடைய செய்யக்கூடாது. தடுப்பூசி கண்டுபிடிக்க, நமது விஞ்ஞானிகள், கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள். பல தடுப்பூசி ஆய்வுப் பணிகள் நம்நாட்டில் நடந்து வருகின்றன. இவற்றில் சில மேம்பட்ட நிலையில் உள்ளது. நிலைமை உறுதி அளிப்பதுபோல் தெரிகிறது.
நண்பர்களே,
கொரோனா தடுப்பூசி எப்போது வந்தாலும், அதை கூடிய விரைவில், மக்களுக்கு வழங்கும், வழிமுறைகளை அரசு தயாரித்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவருக்கும், தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கான பணிகள், விரைவாக நடக்கின்றன.
நண்பர்களே, ராம்சரித்மனாஸ் காவியத்தில், நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் பல எச்சரிக்கைகளும் கூறப்படுகின்றன. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான விஷயம் தீ, எதிரி மற்றும் பாவம். உதாரணத்துக்கு, தவறுகளையும், நோய்களையும் ஒருபோதும் சிறியதாக கருதக்கூடாது. அவற்றை முழுவதுமாக நீக்கும்வரை, அவற்றை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால், தடுப்பூசி கிடைக்கும்வரை, கவனக்குறைவு இருக்கக் கூடாது. பண்டிகை காலம், நமது வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் காலம்.
நாம் சிக்கலான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறோம். சிறிது கவனக்குறைவு கூட, நமது முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கெடுத்துவிடும். பொறுப்புடனும், கண்காணிப்புடனும் நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சோப்பு போட்டு கை கழுவுவது, முகக் கவசம் அணிவது போன்றவற்றில் கவனமாக இருங்கள். இது எனது பணிவான வேண்டுகோள். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். இந்தப் பண்டிகைகள், உங்கள் வாழ்வில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியான சூழலையும் உருவாக்க வேண்டும். அதனால், எச்சரிக்கையுடன் இருங்கள் என மக்கள் ஒவ்வொருவரிடமும் நான் வலியுறுத்துகிறேன்.
இந்த கொரோனா நெறிமுறைகளை, மக்கள் பின்பற்றும்படி, அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். இதுதான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். நீங்கள் எங்களுக்கும், கோடிக்கணக்கான மக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்.
என் அருமை நாட்டு மக்களே,
ஆரோக்கியமாக இருங்கள், விரைவாக முன்னோக்கிச் செல்லுங்கள், நாம் அனைவரும், நாட்டை முன்னேற்றுவோம். இந்த சிறந்த வாழ்த்துக்களுடன், நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, சத் பூஜா மற்றும் குருநானக் ஜெயந்தி போன்ற விழாக்களுக்காக, மக்களுக்கு நான் மீண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!