ஜோர்டான் முடியரசின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேன்மைமிகு அரசர் அப்துல்லா மற்றும் ஜோர்டான் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உலகத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தில் மதிப்பிற்குரிய பெயரை ஜோர்டான் பெற்றுள்ளது.
மேன்மைமிகு அரசர் அப்துல்லாவின் தொலைநோக்கு தலைமையின்கீழ் நீடித்த மற்றும் அனைவரையும் ஒன்றிணைத்த வளர்ச்சியை ஜோர்டான் அடைந்துள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மேம்பாட்டில் அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது.
உலகின் முக்கிய பகுதியில் சக்திவாய்ந்த குரலாகவும், நடுநிலைமிக்க மற்றும் அனைவரையும் ஒன்றிணைக்கும் சர்வதேச அடையாளமாகவும் ஜோர்டான் வளர்ந்துள்ளது.
அண்டை நாடுகளுடன் அமைதியை பேணுவதற்கான எடுத்துக்காட்டாகவும், நிலைத்தன்மைக்கான அடையாளமாகவும் திகழும் ஜோர்டான் நியாயமானவற்றுக்கு குரல் கொடுக்கிறது.
மேற்கு ஆசியாவில் அமைதியை ஊக்குவிப்பதற்கு மேன்மைமிகு அரசர் முக்கிய பங்காற்றுகிறார்.
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பில் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு அக்காபா செயல்முறை பங்காற்றியது.
அதேபோன்று, சகிப்புத்தன்மை ஒற்றுமை மற்றும் சக மனிதர்களுக்கான மரியாதையின் சக்தி வாய்ந்த அறைகூவலாக 2004-ஆம் ஆண்டின் அம்மான் செய்தி அமைந்தது.
2018-ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க பயணமாக மேண்மைமிகு அரசர் புது தில்லி வந்தபோது இது எதிரொலித்தது.
ஆன்மீக அறிஞர்களின் கூட்டத்தில் 'உலகத்தின் எதிர்காலத்திற்கு கடவுள் நம்பிக்கை ஆற்றும் பங்கு' எனும் தலைப்பில் உரையாற்றுவதற்கு நான் விடுத்த அழைப்பை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
நிதானமும் அமைதியாக இணைந்து வாழ்வதும் அமைதி மற்றும் வளத்திற்கு மிகவும் அவசியம் என்ற நம்பிக்கையில் இந்தியா மற்றும் ஜோர்டான் இணைந்திருக்கின்றன.
மனித குலத்தின் சிறப்பான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளில் நாம் தொடர்ந்து இணைந்து முன்னேறுவோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மேன்மைமிகு அரசருக்கும் ஜோர்டானின் மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்ப் மப்ரூக், வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்.
நன்றி.