நாட்டின் இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்களின் மனவலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடன், அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். ‘மனதின் குரல்’, ‘தேர்வு பற்றிய விவாதம்’ அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் என எதுவாக இருந்தாலும் பிரதமர் மோடி எப்போதும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது ஆர்வத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டேராடூனைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அனுராக் ரமோலாவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர், அந்த மாணவரின் ஓவியம் மற்றும் அவரது சிந்தனைகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அனுராக்கின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பிரதமர்., அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உங்களது ஓவியத்தின் மையக் கருவாக ‘இந்திய சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா’–வை தேர்ந்தெடுத்திருப்பது, உங்களது சிந்தனைகள் முதிர்ச்சியடைந்திருப்பதை நீங்கள் எழுதிய கடிதத்தின் வார்த்தைகளில் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். உங்களது வளரிளம் பருவத்திலிருந்தே தேச நலன் சார்ந்த அம்சங்களை அறிந்துகொள்ளும் தன்மையை நீங்கள் உருவாக்கி்க் கொண்டிருப்பதும், ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், நாட்டின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பை உணர்ந்திருப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’.
இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்றுவதில் நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்பையும் பாராட்டியுள்ள அதே வேளையில், தமது கடிதத்தில் பிரதமர் மேலும் கூறியிருப்பதாவது: “சுதந்திரத்தின் இந்த அமிர்த காலத்தில், நாடு கூட்டு வலிமையின் சக்தி மற்றும் ‘அனைவரும் முயற்சிப்போம்’ என்ற தாரக மந்திரத்துடன் நாடு தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அனுராக்கின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வெற்றிக்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட புதுமை சிந்தனைகளுடன் வாழ்க்கையில், தொடர்ந்து முன்னேற்றம் அடைவீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாணவர் அனுராக்கை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது ஓவியத்தை நமோ செயலி மற்றும் Narendramodi.in என்ற தமது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
தேச நலன் சார்ந்த தலைப்புகள் குறித்த தமது எண்ணங்களை விவரித்து மாணவர் அனுராக் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவு கூரத்தக்கது. அனுராக் எழுதிய கடிதத்தில், எதிர்மறையான நேரங்களிலும் பொறுமையை இழக்காமல் இருப்பதுடன், கடின உழைப்பு மூலம் தமது குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்வது மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் பிரதமரின் செயல்பாடுகள் தம்மை பெரிதும் ஈர்த்ததாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பு: அனுராக் ரமோலா கலை மற்றும் கலாச்சாரத்திற்கான 2021ஆம் ஆண்டின் பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது பெற்றவர் ஆவார்.