வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று வான்வழி ஆய்வுக்குப் பிறகு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.
Our prayers are with those affected by the landslide in Wayanad. The Centre assures every possible support to aid in relief efforts.https://t.co/3fS83dFmrp
— Narendra Modi (@narendramodi) August 10, 2024
இயற்கை பேரிடரின் போது காயமடைந்த நோயாளிகளை சந்தித்த பிரதமர், நிவாரண முகாம்களில் வசிப்பவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திரு மோடி, இந்தத் துயரமான நேரத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும், நாடும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். விரிவான கோரிக்கை மனுவை முதல்வர் அனுப்பி வைப்பார் என்றார்.
வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பகுதியும் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலைமையை சமாளிக்கக்கூடிய அனைத்து மத்திய அமைப்புகளும் அணிதிரட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றன என்று திரு மோடி கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், மாநில காவல்துறை, உள்ளூர் மருத்துவப் படை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சேவை சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள், உடனடியாக பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியவர்களை பிரதமர் பாராட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பங்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய நீண்டகாலத் திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவுடன் மாநில அரசு இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வீடுகள், பள்ளிகள், சாலை உள்கட்டமைப்பு மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் என இந்தப் பிராந்தியத்தில் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நாடும் மத்திய அரசும் எல்லா முயற்சியையும் எடுக்கும் என்று பிரதமர் வயநாடு மக்களுக்கு உறுதியளித்தார்.