மேன்மை தங்கிய அதிபர் பைடன் அவர்களே, இருநாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே!
வணக்கம்!
முதலாவதாக, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து சுமூகமான உரையையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வழங்கிய அதிபர் பைடனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியா-அமெரிக்கா உறவுகளின் வரலாற்றில் இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாகும். இன்றைய எங்களின் விவாதங்களும் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளும் புதிய அத்தியாயத்தைத் திறந்திருப்பதோடு புதிய திசையைக் காட்டி, எங்களின் உலகளாவிய உத்திகள் வகுத்தல் பங்களிப்பில் புதிய பலத்தையும் வழங்கியுள்ளது.
நண்பர்களே,
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மற்றும் மூலதன பங்களிப்பு இருநாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி உலகளாவிய பொருளாதாரத்திற்கும் முக்கியமானதாகும். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகம் பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. வர்த்தகம் தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய தொடக்கத்தை உருவாக்குவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஐசிஇடி எனப்படும் முக்கியமான மற்றும் புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி என்பது எங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு முக்கிய கட்டமைப்பாக உருவாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், விண்வெளி, குவாண்டம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் எங்களின் ஒத்துழைப்பை விரிவாக்குவதன் மூலம் நாங்கள் வலுவான எதிர்காலத்திற்குரிய நட்புணர்வைக் கட்டமைத்துள்ளோம். மைக்ரான், கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பது எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பின் அடையாளமாகும்.
இந்தப் பயணத்தின் போது, அமெரிக்காவைச் சேர்ந்த வேறு சில தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருந்தேன். இவர்களுடனான எனது கலந்துரையாடலின் போது, இந்தியா குறித்த அவர்களின் ஆர்வத்தையும், ஆக்கப்பூர்வ அணுகுமுறையையும் நான் உணர்ந்தேன். நமது உத்திகள் வகுக்கும் தொழில்நுட்ப பங்களிப்பை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு அரசுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து வரவேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். தூய எரிசக்தி பரிமாற்றத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பகிரப்பட்ட தொலைநோக்குத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பல முக்கிய முன்முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். பசுமை ஹைட்ரஜன், காற்றாலை மின்சாரம், மின்கல சேமிப்பு, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற துறைகள் இதில் அடங்கும்.
இந்தியாவின் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் என்ஜின்கள் தயாரிப்பது என்ற ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முடிவு முக்கியமானதாகும். இதனால் இருநாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வரும் காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய வடிவத்தை வழங்கும். இருநாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகள், ஸ்டார்ட்-அப்கள் இந்த ஒத்துழைப்பில் முக்கிய பங்கேற்பாளர்களாக இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது எங்களின் பாதுகாப்பு தொழில்துறை திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகால ஆழமான ஒத்துழைப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். சுருங்கக் கூறினால் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கு வானமும் கூட எல்லையில்லை.
நண்பர்களே,
எங்கள் உறவின் மிக முக்கியமான தூண் மக்களுக்கு இடையேயான உறவாகும். 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியா வம்சாவழியினர் இன்று, அமெரிக்காவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறார்கள். இன்று காலை வெள்ளை மாளிகையில், பெரும் எண்ணிக்கையில் இந்தியர்கள் திரண்டிருந்தது எங்கள் உறவின் இயக்கு சக்தியாக இருப்பது இந்திய அமெரிக்கர்கள் என்பதற்கான சான்றாகும். உறவுகளை மேலும் ஆழப்படுத்த பெங்களூரு, அகமதாபாத் ஆகியவற்றில் துணைத் தூதரகங்களைத் திறப்பது என்ற அமெரிக்காவின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல், இந்தியாவின் புதிய துணைத் தூதரகம் சியாட்டிலில் திறக்கப்படும்.
நண்பர்களே,
இன்றைய சந்திப்பில் நாங்கள் பல பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களை விவாதித்தோம். இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமையாக இருந்தது. இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியும், வெற்றியும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். க்வாட் பங்கேற்பாளர்களுடன் இணைந்து இந்தப் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடன் எங்களின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துகொண்டோம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் தோளோடு தோள் சேர்ந்து நாங்கள் செயல்படுகிறோம். கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரில் உலகின் தென்பகுதி நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்பது எங்களின் கருத்தாகும். உக்ரைனில் பிரச்சனைத் தொடங்கிய போதிலிருந்து இதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய முறையில் தீர்வுகாண வேண்டும் எனபதை இந்தியா வலியுறுத்தி வருகிறது. அமைதி திரும்ப சாத்தியமான அனைத்துப் பங்களிப்பையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகளுக்கு அதரவு அளிக்கிறோம். ஜி20-ன் முழு உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியத்தை மாற்றுவதற்கான எனது யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிபர் பைடனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நண்பர்களே,
ஜனநாயகத்தையும், ஜனநாயக மாண்புகளையும், முறைகளையும் வலுப்படுத்த அனைவரின் கூட்டான முயற்சி என்பது அடிப்படை மந்திரமாகும். உலகின் இரண்டு பெரிய ஜனநாயகங்களான இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து உலக அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய முடியும். இந்த மாண்புகளின் அடிப்படையில், இருநாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதிபர் பைடன் அவர்களே,
இன்றைய பயனுள்ள விவாதங்களுக்காக எனது அடிமனதிலிருந்து நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியா, இந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறும் போது, உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் கூட காத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான் செல்ல வேண்டியிருப்பதால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் எனது பேச்சை நிறைவு செய்கிறேன் அதிபருக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவிக்கிறேன்.