
பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 12 ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
காலை 8.30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் செல்லும் பிரதமர், அங்கு பார்வதி குண்ட் என்னுமிடத்தில் வழிபாடு செய்கிறார். இந்த இடத்தில் உள்ள புனித ஆதி கைலாயத்திடம் பிரதமர் ஆசி பெறுவார். இந்தப் பகுதி அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும்.
காலை 9.30 மணியளவில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சி கிராமத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடுகிறார், மேலும் உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தும் கண்காட்சியை அவர் பார்வையிடுவார். ராணுவம், இந்தோ-திபெத் எல்லைக்காவல் (ஐ.டி.பி.பி), எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) ஆகியவற்றின் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜகேஷ்வர் செல்லும் பிரதமர், அங்கு ஜகேஷ்வர் தாம் என்ற இடத்தில் வழிபாடு செய்கிறார் சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜகேஷ்வர் தாம் சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது.
அதன் பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் பித்தோராகர் செல்லும் பிரதமர், அங்கு ஊரக வளர்ச்சி, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.