பிரதமர் திரு நரேந்திர மோடி, 20 அக்டோபர் 2021 அன்று உத்தப்பிரதேசம் செல்கிறார். அன்று காலை பத்து மணி அளவில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் அபிதாம்மா தினத்தையொட்டி மகாபரிநிர்வானா கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அதன் பின், சுமார் 1.15 மணி அளவில், குஷிநகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு
குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர். இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து வருகின்றனர். இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரியா, ஆமராபுரா, ராமன்யா, மால்வட்டா ஆகிய நிகாதாக்களைச் சேர்ந்த அணுநாயகர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் இலங்கை அரசின் கேபினட் அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு & சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம் அதன் அருகில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும்.
மகாபரிநிர்வானா கோவிலில் அபிதாம்மா தினம்
மகாபரிநிர்வானா கோவிலுக்குச் செல்லும் பிரதமர், அங்கு சாய்ந்த நிலையில் உள்ள புத்தபிரான் சிலைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், போதி மரக்கன்றையும் நடுகிறார்.
அபிதாம்மா தினத்தைக் குறிக்கும் விதமாக நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். புத்த துறவிகளுக்கான வர்சாவாஸ் அல்லது வாசா எனப்படும் மூன்று மாத கால மழைக்காலத்தின் முடிவைக் குறிக்கும் விதமாக, இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் காலக்கட்டதில், புத்த துறவிகள், விஹாரா மற்றும் மடாலயத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்வர். இந்த நிகழ்ச்சியில், இலங்கை , தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான் மற்றும் கம்போடியாவிலிருந்து வரும் பிரபல புத்த துறவிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்களும் கலந்து கொள்கின்றனர்.
அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர், குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினைப் பொருட்கள், புத்த சூத்திரங்களின் கையெழுத்துப் பிரதியையும் பார்வையிட உள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்
குஷிநகரின், பார்வா ஜங்கல் பகுதியில் நடைபெறும் அரசு விழாவிலும் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், குஷிநகரில் ரூ.250 கோடிக்கும் மேற்பட்ட செலவில் அமைக்கப்பட உள்ள ராஜ்கியா மருத்துவக்கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். 500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2022 – 2023 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். இது தவிர, ரூ.180 கோடிக்கு மேல் மதிப்புள்ள 12 வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.