பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம்தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். முற்பகல் 11 மணியளவில், இம்பாலில் ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில், அகர்தலாவில், மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அவர் தொடங்கி வைப்பார்.மேலும் இரண்டு வளர்ச்சி முன்முயற்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மணிப்பூரில் பிரதமர்
மணிப்பூரில் பிரதமர் ரூ.1850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், ரூ.2950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி , தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் அடங்கும்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாலை இணைப்பை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்கின் அடிப்படையில், ரூ.1700 கோடி மதிப்பிலான ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த திட்டம் 110 கி.மீ தூரத்துக்கு செயல்படுத்தப்படும். சில்சார்-இம்பால் இடையே போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையிலான, பாரக் ஆற்றின் குறுக்கே ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
சுமார் ரூ.1100 கோடி செலவில் கட்டப்பட்ட 2350-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களை பிரதமர் மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இது மாநிலத்தில் கைபேசி இணைப்புகள் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கும்.
மாநிலத்தில் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இம்பாலில் ரூ.160 கோடி மதிப்பில் தனியார், பொதுத்துறை கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ள நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். கியாம்சியில், புதிதாக கட்டப்பட்ட 200 படுக்கைகள் கோவிட் மருத்துவமனை தொடங்கி வைக்கப்படுகிறது . இது டிஆர்டிஓ ஒத்துழைப்புடன் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய நகரங்களை அதி நவீன வசதிகளுடன் மாற்றும் பிரதமரின் இடையறாத முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் இம்பால் பொலிவுறு நகரம் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முடிவடையவுள்ளன. இதில் ரூ.170 கோடி செலவிலான மூன்று திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ‘ புதிய கண்டுபிடிப்பு, புத்தாக்கம், பயிற்சி’ குறித்த மணிப்பூரின் மிகப்பெரிய பிபிபி முன்முயற்சிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது; இது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.
அரியானாவின் குர்கானில், மணிப்பூர் கலைத்திறன்கள் நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அரியானாவில் மணிப்பூர் கலைத்திறன் நிறுவனத்தை அமைக்கும் எண்ணம் 1990-ல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த சிந்தனை பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டது. மாநிலத்தின் பாரம்பரிய வளம் மிக்க கலைகளை ஊக்குவிக்கும் ரூ.240 கோடி மதிப்பிலான இந்நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இம்பாலில் புதுப்பிக்கப்பட்ட கோவிந்தாஜி கோயிலைத் திறந்து வைக்கும் பிரதமர், மொய்ராங்கில் ஐஎன்ஏ வளாகத்தையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் ‘சப்கா சாத்-சப்கா விகாஸ்-சப்கா விஸ்வாஸ்’ மந்திரத்திற்கு ஏற்ப, பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரமத்தின் கீழ், ரூ.130 கோடி மதிப்பிலான 72 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு பயனளிக்கும். மாநிலத்தில் கைத்தறி நெசவை ஊக்குவிக்கும் ரூ.36 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர மேலும் பல திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
திரிபுராவில் பிரதமர்
மாநிலத்தில் பிரதமர் பயணம் மேற்கொண்டு, பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு பிராந்தியத்தில் முழுமையான வளர்ச்சி என்ற பிரதமரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, குடிநீர் விநியோகம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, கைத்தறி, திறன் மேம்பாடு போன்ற பல துறைகள் பயனடையும்
நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் நவீன வசதிகள் வழங்கபட வேண்டும் என்ற பிரதமரின் முயற்சிக்கு ஏற்ப ,திரிபுராவில் மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ.450 கோடியில், 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், 100 பள்ளிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், தற்போது உள்ள 100 மேல்நிலைப்பள்ளிகளை வித்யஜோதி பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ரூ.500 கோடியில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும்.
மாநிலத்தில், வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள், மின் இணைப்புகள், சிறந்த சாலைகள், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்கும் முதலமைச்சர் திரிபுரா கிராம சம்ரிதி திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்