பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 அக்டோபர் 26 அன்று மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிற்பகல் 1 மணியளவில், அகமதுநகர் மாவட்டம், ஷீரடி செல்லும் பிரதமர், ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரதமர், நில்வாண்டே அணையில் ஜல பூஜை செய்து, அணையின் கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பிற்பகல் 3:15 மணியளவில், ஷீரடியில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார், அங்கு சுகாதாரம், ரயில், சாலை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ .7500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.
மாலை 06:30 மணியளவில் கோவா செல்லும் பிரதமர், அங்கு 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிராவில் பிரதமர்:
ஷீரடியில் பிரதமர் திறந்து வைக்கும் புதிய பக்தர்கள் வரிசை வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்பு பகுதிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மெகா கட்டிடமாகும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வகையில் பல காத்திருப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியுடன் கூடிய பொது வசதிகளான பொருள் வைப்பறைகள், கழிவறைகள், முன்பதிவு அரங்குகள், பிரசாத அரங்குகள் , தகவல் மையம் போன்றவை உள்ளன. இந்தப் புதிய வளாகத்திற்கு 2018 அக்டோபரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நில்வாண்டே அணையின் இடது கரை (85 கி.மீ) கால்வாய் கட்டமைப்பை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன் மூலம் 7 தாலுகாக்கள் அடங்கிய 182 கிராமங்கள் (அகமதுநகர் மாவட்டத்தில் 6 மற்றும் நாசிக் மாவட்டத்தில் இருந்து 1) குடிநீர் விநியோகத்தைப் பெற்று பயன் அடையும். நில்வாண்டே அணை என்ற யோசனை முதன்முதலில் 1970-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது சுமார் 5177 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பொது நிகழ்ச்சியின் போது, 'நமோ உழவர் மரியாதை நிதி’என்னும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிராவில் பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6000 கூடுதல் தொகையை வழங்குவதன் மூலம் இந்தத் திட்டம் பயனளிக்கும்.
அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை; குர்துவாடி-லத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ); ஜல்காவோன் மற்றும் பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 வது மற்றும் 4 வது ரயில் பாதை; என்.ஹெச்-166 இன் சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மன்மத் முனையத்தின் கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குவார்.
கோவாவில் பிரதமர்:
பிரதமரின் தலைமையின் கீழ், நாட்டின் விளையாட்டு கலாச்சாரம் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. அரசின் தொடர்ச்சியான ஆதரவால், சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சிறந்த செயல்திறன் கொண்டவர்களை அடையாளம் காணவும், விளையாட்டின் புகழை மேலும் அதிகரிக்கவும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாட்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை அக்டோபர் 26, 2023 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.
கோவாவில் முதன்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 28 இடங்களில், 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.