பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை மத்தியப்பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
காலை 10.30 மணியளவில் பிரதமர், ராணி கமலாபதி ரயில் நிலையத்தை அடைந்து 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். போபால் (ராணி கமலாபதி) – இந்தூர், போபால் (ராணி கமலாபதி) – ஜபல்பூர், ராஞ்சி – பாட்னா, தார்வாட் – பெங்களூரு, கோவா (மட்கான்) – மும்பை ஆகிய இடங்களுக்கு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது.
போபால் (ராணி கமலாபதி) – இந்தூர் வந்தே பாரத் விரைவு ரயில் மத்தியப் பிரதேசத்தில் இந்த இரண்டு முக்கியமான நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்திற்கு வழிவகுக்கும். அந்தப் பிராந்தியத்தில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
போபால் (ராணி கமலாபதி) – ஜபல்பூர் வந்தே பாரத் விரைவு ரயில் மத்தியப்பிரதேசத்தில் மகா கௌஷல் பிராந்தியத்தை (ஜபல்பூர்) மத்தியப் பிராந்தியத்துடன் (போபால்) இணைக்கும். பெராகாட், பச்மார்கி, சத்புரா ஆகிய சுற்றுலாத் தலங்கள் விரிவுபடுத்தப்படும்.
ராஞ்சி – பாட்னா வந்தே பாரத் விரைவு ரயில் ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது பாட்னாவுக்கும், ராஞ்சிக்கும் இடையே ரயில் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாகும்.
தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட், ஹூப்பள்ளி, தாவனகரே ஆகிய முக்கிய சுற்றுலா நகரங்களை தலைநகர் பெங்களூருடன் இணைக்கும் இந்த ரயில் மூலம், அந்தப் பிராந்தியத்தின் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பயனடைவார்கள்.
கோவா (மட்கான்) – மும்பை வந்தே பாரத் விரைவு ரயில் கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திற்கும், கோவாவின் மட்கான் ரயில் நிலையத்திற்கும் இடையே ஓடும். கோவா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த ரயில் உதவும்.