பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை மத்தியப்பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மாலை 3.30 மணியளவில் ஷதோலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு அவர் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு அரிவாள் செல் மரபணு நிலை அட்டைகளை அவர் வழங்குகிறார்.
இந்த இயக்கம், அரிவாள் செல் நோயால் ஏற்படும் சுகாதார சவால்களை, குறிப்பாக பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் நோய் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டதாகும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த நோய் ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார், உத்தராகண்ட் ஆகிய அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 17 மாநிங்களைச் சேர்ந்த 278 மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்ட அட்டைகளை வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கிராமப் பஞ்சாயத்துக்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த அட்டை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு பயனாளியும் 100 சதவீத நலத்திட்டப் பயன்களை பெற வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கை எட்டும் விதமாக இந்த ஆயுஷ்மான் அட்டை வழங்கும் இயக்கம் செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆண்ட ராணியான ராணி துர்காவதியை பிரதமர் கௌரவிப்பார். மொகலாயர்களிடமிருந்து விடுதலைக்காக போராடிய மிகவும் துணிச்சலான, அச்சமற்ற வீராங்கனையாக அவர் திகழ்ந்தார்.
மாலை 5.00 மணியளவில் ஷதோல் மாவட்டத்தில் பக்காரியா கிராமத்திற்கு பிரதமர் செல்கிறார். அங்கு பழங்குடியின சமுதாயத்தினர், சுயஉதவிக் குழுக்கள், பெசா (தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட பஞ்சாயத்துக்கள்) கமிட்டித் தலைவர்கள், கிராம கால்பந்து சங்கங்களின் கேப்டன்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடுவார்.