பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். அன்று காலை 10.45 மணி அளவில், குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவிப்பார். இதன் பிறகு நண்பகல் வாக்கில் ஷியோபூரின் கரஹாலில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் சமூக ஆதாரவள நபர்களும் பங்கேற்கும் மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் அவர் பங்கேற்பார்.
குனோ தேசிய பூங்காவில் பிரதமர்
குனோ தேசிய பூங்காவில் பிரதமர் சிறுத்தைகளை விடுவிப்பது இந்தியாவின் வனவிலங்குகளை புத்துயிர் பெறச் செய்வது அவற்றின் இனப்பெருக்கத்தையும் வாழ்விடத்தையும் அதிகப்படுத்துவது என்ற அவரின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும். இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக 1952-ல் அறிவிக்கப்பட்டது. தற்போது விடுவிக்கப்படும் சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. சிறுத்தைகள் திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிறுத்தைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. உலகிலேயே முதல் முறையாக கண்டங்களுக்கு இடையே மாமிச உண்ணியான விலங்கு மாற்று இடங்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவந்திருப்பது வனம் மற்றும் புல்வெளி சூழலை மீட்டமைக்க உதவும். இது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுவதுடன் தண்ணீர் பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு பயனளித்தல் போன்ற சூழல் சேவைகளை விரிவுப்படுத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புக்கான பிரதமரின் உறுதிமொழி அடிப்படையிலான இந்த முயற்சி, சுற்றுச் சூழல் மேம்பாடு மற்றும் சூழல் சுற்றுலா மூலம் உள்ளூர் சமூகத்திற்கான வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.
மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் பிரதமர்
ஷியோபூரின் கரஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுயஉதவிக் குழுக்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் மேம்படுத்தப்பட்ட சமூக ஆதாரவள நபர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நலிவடைந்த பழங்குடியினர் வகுப்புகளின் குறிப்பிட்ட 4 பிரிவினருக்கு திறன்மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைப்பார்.
சுயஉதவிக் குழுக்களுக்குள் கிராமப்புற ஏழை மக்களை படிப்படியாக கொண்டு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும், வருவாயை கூடுதலாக்கவும், தரமான வாழ்க்கையை அளிக்கவும் நீண்டகால உதவியைச் செய்வது தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை, மகளிர் கல்வி, இதர பாலினம் சார்ந்த விஷயங்கள், ஊட்டச்சத்து, துப்புரவு, சுகாதாரம் போன்ற விஷயங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்தலை நோக்கி பணியாற்றுவதும், இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.