பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 27, 2023 அன்று கர்நாடகாவிற்குச் செல்கிறார். காலை 11:45 மணியளவில், பிரதமர் சிவமொக்கா விமான நிலையத்தை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு, அவர் சிவமொக்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர், பிற்பகல் 3:15 மணியளவில், பிரதமர் பெலகாவியில் பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் 13வது தவணைத் தொகையை விடுவிக்கிறார்.
சிவமொக்காவில் பிரதமர்
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் பிரதமரின் உறுதியான செயல்பாடுகள் சிவமொக்கா விமான நிலையத் திறப்பின் மூலம் மேலும் வலுப்படும். ரூ. 450 கோடி செலவில் இந்தப் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடம் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சிவமொக்கா, மல்நாடு பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
சிவமொக்காவில் இரண்டு ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் சிவமொக்கா - ஷிகாரிபுரா - ரானேபென்னூர் புதிய ரயில் பாதை மற்றும் கோட்டகங்குரு ரயில்வே பெட்டி பணிமனை (கோச்சிங் டிப்போ) ஆகியவை அடங்கும். சிவமொக்கா - ஷிகாரிபுரா - ரானேபென்னூர் புதிய ரயில் பாதை, ரூ. 990 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, பெங்களூரு-மும்பை பிரதான வழித்தடத்துடன் மல்நாடு பகுதியை இணைக்கும். சிவமொக்கா நகரில் இருந்து புதிய ரயில்களை இயக்கவும், பெங்களூரு மற்றும் மைசூருவில் பராமரிப்பணிகளின் நெருக்கடியைக் குறைக்கவும் ரூ. 100 கோடி செலவில் கோட்டாங்குரு ரயில்வே கோச்சிங் டிப்போ உருவாக்கப்படும்.
பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 215 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதில், பைந்தூர் - ராணிபென்னூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 766 சி-யில் ஷிகாரிபுரா நகரத்திற்கு புதிய புறவழிச் சாலை அமைக்கும் திட்டமும் அடங்கும். மேகரவல்லியிலிருந்து ஆகும்பே வரை தேசிய நெடுஞ்சாலை-169 ஏ- வை அகலப்படுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 169-ல் தீர்த்தஹள்ளி தாலுகாவில் பாரதிபுராவில் புதிய பாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
நிகழ்ச்சியின் போது, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.950 கோடி மதிப்பில் பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் கௌதமாபுராவிற்கான ஒரு கூட்டு கிராமத் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ. 860 கோடி செலவில் உருவாக்கப்படும் மூன்று கூட்டு கிராமத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். நான்கு திட்டங்களும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது அப்பகுதிகளில் வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படும் என்பதுடன் மொத்தம் 4.4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவமொக்கா நகரில் ரூ. 895 கோடி மதிப்பிலான 44 நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 110 கிமீ நீளம் கொண்ட 8 நவீன சாலை தொகுப்புகள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பல அடுக்கு கார் பார்க்கிங், நவீன பேருந்து நிறுத்துமிடத் திட்டங்கள், நவீன திடக்கழிவு மேலாண்மை அமைப்பு, சிவப்ப நாயக் அரண்மனை போன்ற பாரம்பரிய இடங்களை அருங்காட்சியகமாக மேம்படுத்துதல், 90 பாதுகாப்புக் கோட்டுப் பாதைகள், பூங்காக்கள் மற்றும் நதிக் கரை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்.
பெலகாவியில் பிரதமர்
விவசாயிகளின் நலனுக்கான பிரதமரின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு உதாரணமாக, பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டம் (PM-KISAN) உள்ளது. இத்திட்டத்தின் 13-வது தவணைத் தொகையாக சுமார் ரூ. 16,000 கோடியை நேரடிப் பரிமாற்றம் மூலம் பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் 8 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாய குடும்பத்தினருக்கு தலா ரூ. 2000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, மறுசிரமைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையம் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காக ரூ.190 கோடி செலவில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் மற்றொரு ரயில்வே திட்டம் பெலகாவியில் உள்ள லோண்டா-பெலகாவி-கடபிரபா இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டமாகும். சுமார் ரூ. 930 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், மும்பை - புனே - ஹூப்பள்ளி - பெங்களூரு ரயில் பாதையில் பாதையின் திறனை மேம்படுத்தும். இது அந்தப் பகுதியில் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.
பெலகாவியில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ. 1585 கோடி செலவில் 315-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8.8 லட்சம் மக்கள் பயன்பெறும் ஆறு கூட்டு கிராமத் திட்ட திட்டங்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.