பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஜூன் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 20 ஆம் தேதி மதியம் சுமார் 12:30 மணியளவில், பிரதமர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்துக்கு செல்கிறார், அங்கு அவர் மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார். மற்றும் பாக்சி-பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார். மதியம் 1:45 மணியளவில் அவர் டாக்டர். பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையைத் திறக்கிறார். கர்நாடகாவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நேஷன் 150 'தொழில்நுட்ப மையங்களை' அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 2:45 மணியளவில், பெங்களூருவில் உள்ள கொம்மகட்டாவைச் சென்றடையும் பிரதமர், அங்கு ரூ.27,000 கோடி மதிப்பிலான பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், பின்னர் மாலை சுமார் 5:30 மணியளவில், மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் கலந்துகொள்கிறார்.நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் பயிற்சி முனையத்திற்கு அடிக்கல் நாட்டி, அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தில் 'தொடர்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தை' நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பின், இரவு 7 மணிக்கு, மைசூருவில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்துக்குச் செல்லும் பிரதமர், இரவு 7:45 மணிக்கு, மைசூரில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார்.
ஜூன் 21ஆம் தேதி காலை 06:30 மணியளவில், 8வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
பெங்களூருவில் பிரதமர்
பெங்களூரில் இயக்கம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதற்கான ஒரு படியாக, பெங்களூரு நகரை அதன் புறநகர் பகுதிகள் மற்றும் துணை நகரங்களுடன் இணைக்கும் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.15,700 கோடி செலவிலான இத்திட்டம் மொத்தம் 148 கிமீ நீளம் கொண்ட 4 நடைமேடைகளைக் கொண்டதாகும். சுமார் ரூ.500 கோடி மற்றும் ரூ.375 கோடியில் முறையே மேற்கொள்ளப்படவுள்ள பெங்களூரு கண்டோன்மென்ட், யஸ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ.315 கோடி செலவில் நவீன விமான நிலையத்தின் வடிவில் பையப்பனஹள்ளியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உடுப்பி, மதகான் மற்றும் ரத்னகிரியில் இருந்து மின்சார ரயில்களை கொடியசைத்து துவக்கி வைக்கும் பிரதமர், ரோஹா (மகாராஷ்டிரா) முதல் டோக்கூர் (கர்நாடகா) வரையிலான கொங்கன் ரயில் பாதையின் (சுமார் 740 கிமீ) 100 சதவீத மின்மயமாக்கலையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.1280 கோடிக்கும் அதிகமான செலவில் கொங்கன் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அர்சிகெரே முதல் தும்குரு வரையிலான (சுமார் 96 கிமீ), பயணியர் ரயில்கள் மற்றும் யெலஹங்கா முதல் பெனுகொண்டா வரையிலான (சுமார் 120 கிமீ) மெமோ சேவை ஆகிய இரண்டு இரயில் பாதை இரட்டிப்புத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இரண்டு இரயில் பாதை இரட்டிப்பு திட்டங்களும் முறையே ரூ.750 கோடி மற்றும் ரூ.1100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் போது, பெங்களூரு ரிங் ரோடு திட்டத்தின் இரண்டு பிரிவுகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2280 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும் இத்திட்டம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும். மேலும் பல்வேறு சாலை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் : என்எச்48 இன் நெலமங்களா-தும்கூர் பகுதியின் ஆறு வழிச்சாலை; என்எச்-73ன் புஞ்சல்கட்டே-சார்மாடி பிரிவின் விரிவாக்கம்; என்எச்-69 இன் ஒரு பிரிவின் மறுவாழ்வு மற்றும் மேம்படுத்தல் ஆகிய இந்த திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.3150 கோடி செலவாகும். பெங்களூருவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள முத்தலிங்கனஹள்ளியில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது போக்குவரத்து, கையாளுதல் மற்றும் இரண்டாம் நிலை சரக்கு செலவுகளை குறைக்க உதவும்.
பெங்களூருவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகம் வளாகத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். சுதந்திர இந்தியாவில் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையிலும், அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையிலும், உறைவிடத்துடன் கூடிய பல்கலைக்கழகம் 2017-ல் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் போது, கர்நாடகா முழுவதும் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டுள்ள தேச 150 'தொழில்நுட்ப மையங்களையும்' பிரதமர் அர்ப்பணிக்கிறார். ரூ.4600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான முயற்சிக்கு பல தொழில் கூட்டு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன. தொழில்துறை 4.0 மனிதவள தேவைகளை நிவர்த்தி செய்ய திறமையான பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்ப மையங்கள், அதன் பல்வேறு புதுமையான படிப்புகள் மூலம், அதிநவீன தொழில்நுட்பத்தில் உயர் திறன் பயிற்சியை வழங்குவதோடு, ஐடிஐ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்தும்.
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதன் அடிக்கல்லை பிரதமரே நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையம் இந்த வகையிலான ஆராய்ச்சி வசதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. வயது தொடர்பான மூளைக் கோளாறுகளை நிர்வகிப்பதற்கான ஆதார அடிப்படையிலான பொது சுகாதாரத் தலையீடுகளை வழங்குவதற்கான முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் இது கவனம் செலுத்துகிறது. நிகழ்ச்சியின் போது, 832 படுக்கைகள் கொண்ட பாக்சி பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பெங்களூரு ஐஐஎஸ்சி வளாகத்தில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டு, மதிப்புமிக்க நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவும். இது நாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும். நாட்டில் சுகாதார சேவைகளை மேம்படுத்த உதவும் புதுமையான தீர்வுகளை கண்டறியும் நோக்கில் இது செயல்படும்.
மைசூரில் பிரதமர்
மைசூர் மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொது விழாவில், நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் ரூ.480 கோடி செலவில் உருவாக்கப்படும் புறநகர்ப் போக்குவரத்திற்கான பயிற்சி முனையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பயிற்சி முனையத்தில் மெமோ ஷெட் உள்ளது. இது தற்போதுள்ள மைசூரு யார்டு நெரிசலைக் குறைக்கும், மேலும் மெமு ரயில் சேவைகள் மற்றும் மைசூரிலிருந்து நீண்ட தூர ரயில்களை இயக்க உதவுகிறது, பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் சுற்றுலா திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் தினசரி பயணிகள் மட்டுமின்றி தொலைதூர ஊர்களுக்கு செல்பவர்களும் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியின் போது, அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தில்) 'தொடர்பு குறைபாடுள்ள நபர்களுக்கான சிறந்த மையத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் உள்ள நபர்களை கண்டறிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மறுவாழ்வு செய்வதற்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் தேதி பிரதமரின் நிகழ்ச்சிகள்
ஜூன் 21, 2022 அன்று 8வது சர்வதேச யோகா தினத்தின் விழாவில், மைசூருவில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் கலந்து கொள்வார். விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் 8வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டங்களுடன் ஒருங்கிணைத்து, மைசூரில் பிரதமரின் யோகா கண்காட்சியுடன், 75 மத்திய அமைச்சர்கள் தலைமையில் நாடு முழுவதும் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் பல்வேறு கல்வி, சமூக, அரசியல், கலாச்சார, மத, பெருநிறுவன மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளால் நடத்தப்படும் இவற்றில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.
மைசூருவில் பிரதமரின் யோகா நிகழ்ச்சியானது 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் இணைந்து வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் நடத்தும் யோகா நிகழ்ச்சிகள் தேசிய எல்லைகளைக் கடந்து யோகாவின் ஒருங்கிணைக்கும் சக்தியை விளக்கும் வகையில் ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற புதுமையான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும். சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக உலகம் முழுவதும் நகரும் போது, பூமியில் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து பார்த்தால், பங்கேற்கும் நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது போல் தோன்றும். 'ஒரு சூரியன், ஒரே பூமி' என்ற கருத்துடன் கூடிய இந்த புதுமையான நிகழ்ச்சி டிடி இந்தியாவில் அதிகாலை 3 மணி தொடங்கி (பிஜியில் இருந்து ஒளிபரப்பாகும்) இரவு 10 மணி வரை (சான் பிரான்சிஸ்கோ அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும்) ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியுடன் பிரதமரின் மைசூரு யோகா நிகழ்ச்சி காலை 6.30 மணியிலிருந்து ஒளிபரப்பாகும்.