பிரதமர் நரேந்திர மோடி 2 அக்டோபர் 2024 அன்று ஜார்க்கண்ட் செல்கிறார். பிற்பகல் 2 மணியளவில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.83,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் விரிவான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ.79,150 கோடிக்கும் அதிகமான செலவில் தர்தி ஆபா பழங்குடியினர் கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். 549 மாவட்டங்கள் மற்றும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,740 வட்டாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை இந்த இயக்கம் உள்ளடக்கும். மத்திய அரசின் 17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்படும் 25 செயல்பாடுகள் மூலம், சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழங்குடியின சமூகங்களுக்கான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் பழங்குடியின ஆதிவாசி நியாய மகா (PM-JANMAN) திட்டத்தின் கீழ், ரூ.1,360 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் 1380 கி.மீ-க்கும் அதிகமான சாலைகள், 120 அங்கன்வாடிகள், 250 பல்நோக்கு மையங்கள் மற்றும் 10 பள்ளி விடுதிகள் அடங்கும். மேலும், பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 3,000 கிராமங்களில் 75,800-க்கும் மேற்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு (பிவிடிஜி) மின்சார வசதி, 275 நடமாடும் மருத்துவக் குழுக்களை இயக்குதல், 500 அங்கன்வாடி மையங்களை செயல்படுத்துதல், 250 வன் தன் விகாஸ் கேந்திரங்களை நிறுவுதல் மற்றும் 5,550-க்கும் மேற்பட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய கிராமங்களை 'நல் சே ஜல்' மூலம் செறிவூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளையும் அவர் வெளியிடுவார்.