பிரதமர் திரு. நரேந்திர மோடி 14 மற்றும் 15 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 15ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்கு பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்கு வருகை தரும் முதல் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். குந்தியில் காலை 11:30 மணியளவில் மூன்றாவது பழங்குடியினர் கௌரவ தினம், 2023 கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியின் போது, ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை' மற்றும் பிரதமரின், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் விவசாயிகள் நலத் திட்டத்தின் 15-வது தவணை தொகையை அவர் விடுவிக்கிறார். மேலும் ஜார்க்கண்டில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை திட்டங்களின் பயன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கியத் திட்டங்களின் முழுமையை அடைவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். திட்டங்கள் முழுமை பெறுதல் என்ற இந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக, பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
சுகாதார வசதிகள், அத்தியாவசிய நிதி சேவைகள், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து, நம்பகமான சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்ற நலத்திட்டங்களின் நன்மைகளை மக்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த யாத்திரை கவனம் செலுத்தும். யாத்திரையின் போது உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் மூலம் சாத்தியமான பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை'யை தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வேன்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆரம்பத்தில் கணிசமான பழங்குடி மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த யாத்திரை 2024 ஜனவரி 25 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி யாத்திரை மேற்கொள்ளும்.
பி.எம் பி.வி.டி.ஜி இயக்கம்
'குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கான (பி.எம்.பி.வி.டி.ஜி) பிரதமரின் மேம்பாட்டு இயக்கம்' என்ற முதல் முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட 22,544 கிராமங்களில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் வாழ்கின்றன.
இந்த பழங்குடியின மக்கள் ஆங்காங்கே, தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத குடியிருப்புகளில், பெரும்பாலும் வனப் பகுதிகளில் வசிக்கின்றனர், எனவே சுமார் 24,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், மேம்பட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 அமைச்சகங்களின் 11 நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். உதாரணமாக, பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் , ஜல் ஜீவன் இயக்கம் போன்றவற்றின் கீழ் இந்த தொலைதூர குடியிருப்புகளை உள்ளடக்கும் வகையில் சில திட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும்.
கூடுதலாக, பிரதமரின் மக்கள் ஆராய்கிய திட்டம், ஹீமோகுளோபின் அசாதாரணமான வகையில் காணப்படும் சிக்கில் செல் நோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, 100% நோய்த்தடுப்பு, பிரதமர் சுரக்ஷித் மாத்ரித்வா யோஜனா, பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா, பிரதமரின் போஷன், பிரதமர் மக்கள் வங்கித் திட்டம் போன்றவற்றை முழுமையாக நிறைவேற்றுவது உறுதி செய்யப்படும்.
பிரதமரின் விவசாயிகள் நலம் மற்றும் பிற மேம்பாட்டு முயற்சிகளின் 15 வது தவணை
விவசாயிகளின் நலனில் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை (பி.எம்-கிசான்) கீழ் சுமார் ரூ.18,000 கோடியின் 15 வது தவணைத் தொகை 8 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ரயில், சாலை, கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல துறைகளில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமரால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை 133 இன் மகாகம - ஹன்ஸ்திஹா பிரிவின் 52 கி.மீ தூரத்தை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதும் அடங்கும். தேசிய நெடுஞ்சாலை 114 ஏ இன் பாசுகிநாத் - தியோகர் பிரிவின் 45 கி.மீ நீளத்தை நான்கு வழிச்சாலையாக மாற்றுதல்; கே.டி.எச்-பூர்ணாதி நிலக்கரி கையாளும் ஆலை; ராஞ்சி ஐ.டி.யின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்படுகின்றன.
ஐஐஎம் ராஞ்சியின் புதிய வளாகம் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் அடங்கும்; ஐ.ஐ.டி தன்பாத் புதிய விடுதி; பொகாரோவில் உள்ள பெட்ரோலிய எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் (பிஓஎல்) கிடங்கு; ஹதியா-பக்ரா பிரிவு, தல்காரியா - பொகாரோ பிரிவு மற்றும் ஜராங்திஹ்-பத்ராட்டு பிரிவு போன்ற பல ரயில்வே திட்டங்கள். மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100% ரயில்வே மின்மயமாக்கல் சாதனையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.