பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 29,30 ஆகிய நாட்களில் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 29 ஆம் தேதி காலை 11 மணியளவில், பிரதமர் ரூ.3400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை அர்ப்பணிக்கிறார். பின்னர் பிரதமர் பாவ்நகர் செல்கிறார். அங்கு பிற்பகல் 2 மணியளவில், ரூ.5200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இரவு 9 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 30 -ஆம் தேதி, காலை 10:30 மணியளவில் காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் கலுபூர் ரயில் நிலையத்திலிருந்து தூர்தர்ஷன் கேந்திரா மெட்ரோ நிலையத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள அகமதாபாத் கல்விச் சங்கத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு பிரதமர், மாலை 5:45 மணியளவில், அம்பாஜியில் ரூ.7200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை அர்ப்பணிக்கிறார். இரவு 7 மணியளவில், அம்பாஜி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர் பூஜையிலும் ஈடுபட உள்ளார். பின்னர், இரவு 7:45 மணியளவில், கப்பர் தீர்த்தத்தில் மகா ஆரத்தியில் கலந்து கொள்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற இயக்கம் மற்றும் பல்வேறு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும், பிரதமரின் அர்ப்பணிப்பை இந்த பரந்த அளவிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் பணி பிரதிபலிக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதில் அவருடைய அரசு, தொடர்ந்து கவனம் செலுத்துவதையும் இது காட்டுகிறது.
சூரத்தில் பிரதமர்
ரூ. 3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை அர்ப்பணிக்கிறார். நீர் விநியோகம், கால்வாய் திட்டங்கள், கனவு நகரம், பல்லுயிர் பூங்கா மற்றும் பொது உள்கட்டமைப்பு, பாரம்பரிய இடங்கள் மறுசீரமைப்பு, நகர பேருந்து, பிஆர்டிஎஸ் உள்கட்டமைப்பு, மின்சார வாகன உள்கட்டமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு மேம்பாட்டுப் பணிகள் போன்ற பிற மேம்பாட்டுப் பணிகள் இதில் அடங்கியுள்ளது.
வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகரத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பின் முதல் கட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகரத்தின் திட்டம் சூரத்தில் வைர வர்த்தக வணிகத்தின் விரைவான வளர்ச்சியை பூர்த்தி செய்யும் வகையில் வணிக மற்றும் குடியிருப்பு இடங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
டாக்டர் ஹெட்கேவார் பாலம் முதல் பீம்ராட்-பம்ரோலி பாலம் வரை 87 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பல்லுயிர் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். சூரத்தில் உள்ள அறிவியல் மையத்தில் கோஜ் அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். குழந்தைகளுக்காக கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் உரையாடும் காட்சிகள், கேள்வி அடிப்படையிலான விசாரணை செயல்பாடுகள் மற்றும் கேள்வி அடிப்படையிலான ஆய்வுகள் இருக்கும்.
பாவ்நகரில் பிரதமர்
பாவ்நகரில் ரூ.5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க உள்ளார். உலகின் முதலாவது சிஎன்ஜி முனையத்திற்கும், பாவ் நகரில் உள்ள பிரவுன் பீல்ட் துறைமுகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த துறைமுகம் ரூ.4000 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். உலகின் முதலாவது சிஎன்ஜி முனையம் மற்றும் உலகின் நான்காவது பெரிய நீரை ஏற்றி இறக்கி கையாளும் கதவணை அமைப்பிற்கான உள் கட்டமைப்பை இது கொண்டிருக்கும். கூடுதலாக, சிஎன்ஜி முனையத்திற்கு இப்பகுதியில் வரவிருக்கும் பல்வேறு திட்டங்களின் எதிர்கால தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், துறைமுகம் பூர்த்தி செய்யும். இந்ததுறைமுகமானது அதி நவீன கன்டெய்னர் முனையம், பல்நோக்கு முனையம் மற்றும் தற்போதுள்ள சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கும் வகையிலான முனையத்தை கொண்டிருக்கும். இது சரக்குகளை கையாள்வதில் செலவை மிச்சப்படுத்தும் நன்மை மட்டுமல்லாமல், இப்பகுதியில் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். மேலும், சிஎன்ஜி இறக்குமதி முனையம், தூய்மை எரிசக்தியின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் மாற்று ஆற்றல் ஆதாரத்தை வழங்கும்.
பாவ்நகரில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிராந்திய அறிவியல் மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த மையத்தில் கடல் உயிரின கூடம், வாகன உதிரி பாகங்கள் கூடம், நோபல் பரிசு கூடம், மின்னணு இயந்திரவியல் கூடம், உடலியல் மற்றும் மருத்துவம், உயிரி அறிவியல் கூடம் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான கூடங்கள் உள்ளன. அனிமேட்ரானிக் டைனோசர்கள், அறிவியல் அடிப்படையிலான பொம்மை ரயில், இயற்கை ஆய்வுப் பயணம், நடமாடும் சூரிய ஒளி ஈர்ப்பான் போன்ற குழந்தைகளுக்கான கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுக்கான ஆக்கபூர்வமான தளத்தையும் இந்த மையம் வழங்கும்.
இந்நிகழ்ச்சியின் போது, சௌனி யோஜ்னா இணைப்பு 2, 25 மெகாவாட் பாலிதானா சோலார் பிவி திட்டம், ஏபிபிஎல் கொள்கலன் (ஆவத்குருபா பிளாஸ்டோமெக் தனியார் நிறுவனம்) திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சௌனி யோஹ்னா இணைப்பு 2 இன் 9ம் தொகுப்பு , சோர்வட்லா மண்டல நீர் விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அகமதாபாத்தில் பிரதமர்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 36 வது தேசிய விளைாட்டு போட்டியை பிரதமர் தொடங்கிவைக்கிறார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் உரையாடுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, தேசாரில் உள்ள உலகத் தரம் வாய்ந்த “ஸ்வர்னிம் குஜராத் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தையும்” பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த முக்கியத் திட்டம் நாட்டின் விளையாட்டு கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் முதன்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12, 2022 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் 36 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்க உள்ளது மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டியாக இடம்பெற செய்யும். அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய ஆறு நகரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அப்போதைய முதலமைச்சரும், தற்போதைய பிரதமரான நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குஜராத் சர்வதேச தரத்தில் வலுவான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பயணத்தைத் தொடங்கியது, இது மாநிலம் மிகக் குறுகிய காலத்தில் விளையாட்டுகளுக்குத் தயாராக உதவியது.
அகமதாபாத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி பிரதமர் வைக்கிறார். இது அப்பேரல் பூங்கா முதல் தல்தேஜ் வரையிலான கிழக்கு-மேற்கு வழிதடத்திலும், மொட்டேரா முதல் கியாஸ்பூர் வரையிலான வடக்கு-தெற்கு வழிதடத்திலும் சுமார் 32 கிமீ தூரத்தை உள்ளடக்கியது. கிழக்கு-மேற்கு வழிதடத்தில் உள்ள தல்தேஜ்-வஸ்த்ரல் வழித்தடத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழிதடத்தில் நான்கு நிலையங்களில் 6.6 கிமீ தொலைவிற்கு சுரங்க வழிப்பாதை பகுதி உள்ளது. கியாஸ்பூரை மொட்டேரா மைதானத்துடன் இணைக்கும் 19 கிமீ வடக்கு-தெற்கு வழிதடத்தில் 15 ரயில் நிலையங்கள் உள்ளன. ரூ. 12 900 கோடி செலவில் முதலாவது திட்டம் முழுவதும் கட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் மெட்ரோவில் நிலத்தடி சுரங்கப்பாதைகள், குறுக்கு வழி மற்றும் பாலங்கள், உயரமான மற்றும் நிலத்தடி ரயில் நிலைய கட்டிடங்கள், ரயில் பாதைகள் மற்றும் ஆளில்லா ரயிலை இயக்குவதற்கான உள்கட்டமைப்பை கொண்டதாகும். எரிசக்தி நுகர்வில், 30-35 சதவீதம் வரை சேமிக்கக்கூடிய அமைப்பு இதில் உள்ளது. ரயிலில் உள்ள அதிநவீன இலகுவான அமைப்பு பயணிகளுக்கு, மிகவும் மென்மையான பயண அனுபவத்தை அளிக்கும். அகமதாபாத் மெட்ரோ முதல் கட்ட தொடக்கம் அந்நகர மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பன்னோக்கு போக்குவரத்து வசதியை தரும். இந்திய ரயில்வே மற்றும் பேருந்து போக்குவரத்து (பிஆர்டிஎஸ், ஜிஎஸ்ஆர்டிசி) மற்றும் நகர பேருந்து சேவை) ஆகியவற்றுடன் பன்னோக்கு போக்குவரத்து இணைப்பு வழங்கப்படுகிறது. ராணிப், வதாஜ், ஏஇசி நிலையம் போன்றவற்றில் பிஆர்டிஎஸ் உடனான இணைப்பும் காந்திதாம், கலுபூர் மற்றும் சபர்மதி நிலையங்களில் இந்திய ரயில்வேயுடன் இணைப்பும் இதில் அடங்கும். கலுபூரில், மும்பை மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் அதிவேக ரயில் அமைப்புடன் மெட்ரோ பாதை இணைக்கப்படும்.
காந்திநகர் மற்றும் மும்பை இடையே புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எண்ணற்ற சிறந்த மற்றும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு - கவாச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அனைத்து வகுப்புகளிலும் சாய்வு இருக்கைகள் உள்ளன, அதே நேரத்தில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் 180 டிகிரியில் சுழலும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தகவல் அளிப்பதற்கு 32 இன்ச் அளவிலான திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
அம்பாஜியில் பிரதமர்
அம்பாஜியில் ரூ. 7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 45,000 வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்கி, அடிக்கல் நாட்ட உள்ளார். பிரசாத் திட்டத்தின் கீழ், அம்பாஜி கோவிலில் யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், தரங்கா மலை - அம்பாஜி - அபு சாலை புதிய அகல ரயில் பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். புதிய ரயில் பாதை மூலம் 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜிக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள். மேலும் பக்தர்களின் வழிபாட்டு அனுபவம் இந்த யாத்திரை இடங்களில் மேம்படும். டீசாவில் உள்ள விமானப்படை தளத்தின் ஓடுபாதை, மற்றும் அதோடு தொடர்புடைய உள்கட்டமைப்பு; அம்பாஜி புறவழிச்சாலை உள்ளிட்ட மற்ற திட்டங்களும் இதில் அடங்கும்.
மேற்கு பகுதியில் உள்ள சரக்கு முனையமான 62 கிமீ தொலைவுடைய புதிய பலன்பூர் - புதிய மகேசனா பகுதியையும், 13 கிமீ தொலைவுடைய புதிய பலன்பூர்-புதிய சட்டோதர் பகுதியையும் (பலன்பூர் புறவழிச்சாலை இணைப்பு) பிரதமர் அர்ப்பணிக்கிறார். இது பிபாவாவ், தீன்தயாள் துறைமுக ஆணையம் (கண்ட்லா), முந்த்ரா மற்றும் குஜராத்தின் பிற துறைமுகங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். இந்தப் பகுதிகள் திறக்கப்படுவதன் மூலம், மேற்கு பகுதியில் உள்ள சரக்கு வழித்தடத்தின் 734 கி.மீ. தொலைவிலான பகுதி செயல்பட தொடங்கும்.இதன் மூலம், குஜராத்தில் உள்ள மெஹ்சானா-பலன்பூர்; ராஜஸ்தானி்ல் உள்ள ஸ்வரூப்கஞ்ச், கேசவ்கஞ்ச், கிஷன்கர்; ஹரியானாவில் உள்ள ரேவாரி-மனேசர் மற்றும் நர்னால் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் பயனடையும், மிதா - தாராட் - தீசா உள்ளிட்ட விரிவுப்படுத்தப்பட்ட சாலை திட்டங்களையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார்.