பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 10 அன்று குஜராத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நவ்சாரியில், காலை சுமார் 10.15 மணிக்கு ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது பலவகையான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். பிற்பகல் 12.15 மணி அளவில் ஏ எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார். இதன் பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு அகமதாபாதில் உள்ள போபாலில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகத்தை அவர் தொடங்கிவைப்பார்.
நவ்சாரியில் பிரதமர்
குஜராத் பெருமை இயக்கம் என பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியின் போது நவ்சாரியில் உள்ள பழங்குடி மக்கள் பகுதியான குட்வேலில் ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். 7 திட்டங்களை தொடங்கி வைத்தல், 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பகுதியில், குடிநீர் விநியோகம், சாலைப் போக்குவரத்து போன்றவற்றை மேம்படுத்த இந்தத் திட்டங்கள் உதவும்.
ஏ எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகத்தில் பிரதமர்
நவ்சாரியில், ஏ எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திறந்து வைப்பார். இந்த வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்ச்சியில், பங்கேற்கும் அவர், கரேல் கல்வி வளாகத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பார். இதன் பின்னர், இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.
இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மைய தலைமையகத்தில் பிரதமர்
அகமதாபாதில் உள்ள போபாலில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகத்தை அவர் தொடங்கி வைப்பார். பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில், விண்வெளித் துறையில் பணியாற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பரிமாற்ற நிகழ்ச்சியும் இதில் இடம் பெறும். இந்தியாவின் திறமை மிக்க இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க விண்வெளித்துறையில், தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவது பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகம் அமைப்பது குறித்த அறிவிப்பு ஜூன் 2020-ல் வெளியிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் துறைகளில், விண்வெளி செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்தலுக்கு விண்வெளித் துறையின் சுயேச்சையான ஒற்றைச் சாளர முகவர் அமைப்பாக இது செயல்படும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் இது வாய்ப்புகளை வழங்கும்.