பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 அக்டோபர் 2 ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, ராஜஸ்தானின் சித்தோர்கரில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில் குவாலியர் செல்லும் பிரதமர் அங்கு சுமார் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
சித்தோர்கரில் பிரதமர்
எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாக, மெஹ்சானா - பதிண்டா - குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் பிரதமரால் அர்ப்பணிக்கப்படும். சுமார் ரூ.4500 கோடி செலவில் இந்த குழாய் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அபு சாலையில் உள்ள ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் எல்பிஜி ஆலையையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த ஆலை ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களில் வாயுவை அடைத்து விநியோகிக்கும், மேலும் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் இயக்கத்தை ஆண்டுக்கு சுமார் 0.75 மில்லியன் கி.மீ குறைக்கும், இது ஆண்டுக்கு சுமார் 0.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவும். அஜ்மீர் பாட்லிங் ஆலையில் கூடுதல் சேமிப்பிடத்தையும் அவர் அர்ப்பணிப்பார்.
ரூ.1480 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள தாரா-ஜாலாவர்-தீந்தர் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை -12 (புதிய என்.எச் -52) இல் 4 வழிச் சாலையை பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டம் கோட்டா மற்றும் ஜாலாவர் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளை பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்க உதவும். மேலும், சவாய் மாதோபூரில் ரயில்வே மேம்பாலம் (ஆர்ஓபி) இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக கட்டுவதற்கும், அகலப்படுத்துவதற்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில்வே திட்டங்களில் சித்தோர்கர் - நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா - சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும். ரூ.650 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, மேலும் பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். இவை ராஜஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும்.
சுதேச தர்ஷன் திட்டத்தின் கீழ் நாத்வாராவில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளை பிரதமர் அர்ப்பணிப்பார். வல்லபாச்சாரியார் பரப்பிய புஷ்திமார்க்கத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கானோரின் முக்கிய நம்பிக்கை மையமாக நாத்வாரா விளங்குகிறது. நாத்வாராவில் ஒரு நவீன 'சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம்' உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீநாத்ஜியின் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு அம்சங்களை அனுபவிக்க முடியும். மேலும், கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
குவாலியரில் பிரதமர்
சுமார் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
நாடு முழுவதும் இணைப்பை அதிகரிப்பதற்கான மற்றொரு முயற்சியாக, சுமார் ரூ.11,895 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 1880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கிரஹப் பிரவேஷம் பிரதமரால் தொடங்கப்படும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் - நகர்ப்புறத்தின் கீழ் சுமார் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் அர்ப்பணிக்கிறார்.
பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். குவாலியர் மற்றும் ஷியோபூர் மாவட்டங்களில் ரூ.1530 கோடி மதிப்பிலான ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்களால் இப்பகுதியில் உள்ள 720-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும்.
சுகாதார உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ஒன்பது சுகாதார மையங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் . ரூ.150 கோடிக்கு மேல் செலவில் அவை உருவாக்கப்படும்.
ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை அர்ப்பணிப்பதோடு, வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இந்தூரில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். உஜ்ஜைனியில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம், ஐஓசிஎல் பாட்டிலிங் ஆலை, குவாலியரில் அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் அர்ப்பணிக்கிறார்.