பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 1, 2023 அன்று போபால் செல்லவிருக்கிறார். காலை 10 மணிக்கு போபாலில் உள்ள குஷபவ் தாக்கரே அரங்கில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகளின் உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வார். அதன் பிறகு மாலை 3:15 மணியளவில் போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் போபால் முதல் புதுதில்லி வரையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.
ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகளின் உச்சிமாநாடு 2023:
‘ஆயத்தம், புத்தெழுச்சி, இணக்கம்’ என்ற கருப்பொருளில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ராணுவ தளபதிகளின் உச்சிமாநாடு மூன்று நாட்கள் நடைபெறும். கூட்டு முயற்சி, ஆயுதப்படைகளில் முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த உச்சிமாநாட்டில் ஆலோசிக்கப்படும். ஆயுதப்படைகளை தயார்படுத்துவது மற்றும் தற்சார்பு இந்தியாவை அடையும் பாதையில் பாதுகாப்புத் துறையின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
மூன்று ஆயுதப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானிகளுடன் உள்ளடக்கிய மற்றும் இயல்பான கலந்துரையாடல்களும் நடைபெறும்.
வந்தே பாரத் விரைவு ரயில்:
நாட்டில் பயணிகளின் பயண அனுபவத்தை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மாற்றி அமைத்துள்ளது. இந்தியாவில் 11-வது வந்தே பாரத் ரயில் சேவை போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையம் மற்றும் புதுதில்லி ரயில் நிலையம் இடையே அறிமுகப்படுத்தப்படும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிகளுக்குத் தேவையான நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேவை ரயில் பயணிகளுக்கு விரைவான, வசதியான மற்றும் சுமூகமான பயண அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுலா துறையை ஊக்குவித்து, இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.