பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 28 அன்று அசாமில் பயணம் மேற்கொள்வார். கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள திபுவில் ‘அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில்’ காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியின் போது கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். அதன் பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் திப்ருகரில் உள்ள கானிக்கர் திடலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் மேலும் ஆறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அவர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.
திபு, கர்பி ஆங்லாங்கில் பிரதமர்
இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியில் பிரதமரின் ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாடு காரணமாக, தடைசெய்யப்பட்ட ஆறு கர்பி தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் இடையே அண்மையில் பிரச்சனை தீர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்த பிராந்தியத்தில் அமைதியின் புதிய சகாப்தமாக கருதப்படுகிறது. ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி முன்முயற்சிகளுக்கு ‘அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில்’ பிரதமரின் உரை மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.
கால்நடை மருத்துவக்கல்லூரி (திபு), பட்டப்படிப்பு கல்லூரி (மேற்கு கர்பி ஆங்லாங்), வேளாண் கல்லூரி (கோலோங்கா, மேற்கு கர்பி ஆங்லாங்) ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.500 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டங்கள், இந்த பிராந்தியத்தில் திறன் மற்றும் வேலைக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியின் போது 2,950க்கும் அதிகமான அம்ரித் நீர்நிலைகள் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த நீர்நிலைகளை ரூ.1,150 கோடி செலவில் மாநில அரசு மேம்படுத்தும்.
திப்ருகரில் பிரதமர்
இந்த மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள 17 புற்றுநோய் மருத்துவமனைகளுடன் இணைந்து, அசாம் அரசு மற்றும் டாடா அறக்கட்டளைகளின் கூட்டு முயற்சியான அசாம் புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளை, தெற்காசியாவின் மிகப்பெரிய குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சை வலைப்பின்னல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தில் 10 மருத்துவமனைகளில் ஏழு மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற மூன்று மருத்துவமனைகளின் கட்டுமானம் பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன.
முதலாம் கட்டத்தின் கீழ் பூர்த்தியடைந்த ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த மருத்துவமனைகள் திப்ருகர், கோக்ரஜார், பார்பேடா, தாரங், தேஜ்பூர், லக்கிம்பூர், ஜோர்ஹட் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ளன. துப்ரி, நல்பாரி, கோல்பாரா, நகாவ்ன், சிவசாகர், தீன்சுக்யா, கோலாகட் ஆகிய இடங்களில் இரண்டாவது கட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.