பிரதமர் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு 2021 பிப்ரவரி 7 ஆம் தேதி செல்கிறார். காலை சுமார் 11.45 மணிக்கு இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான `அசாம் மாலா' என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அசாமில் சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மேற்குவங்கத்தில் பிரதமர்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். சுமார் ரூ.1100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எல்.பி.ஜி. கையாளும் திறன் கொண்டது. மேற்குவங்கம் மற்றும் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இந்த முனையம் இருக்கும். அனைத்து வீடுகளுக்கும் எல்.பி.ஜி. வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமரின் லட்சியத்தை நனவாக்கும் வகையில் இது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.
பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார். `ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு' என்ற லட்சியத்தை அடைவதில் இது முக்கியமான மைல்கல்லாக இருக்கும். ரூ.2400 கோடி மதிப்பில் இத் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹர்ல் சிந்த்ரி (HURL Sindri) உர தொழிற்சாலையை மீண்டும் செயல்படச் செய்வதற்கும், மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள மேட்டிக்ஸ் உர தொழிற்சாலைக்கு எரிவாயு வழங்குவதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும், மாநிலத்தில் முக்கியமான நகரங்களில் தொழிற்சாலைகள், வணிக மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் மற்றும் நகர எரிவாயு வழங்கலுக்கு உதவியாகவும் இத் திட்டம் இருக்கும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் ஹால்டியா சுத்திகரிப்பு வளாகத்தில் இரண்டாவது கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஆண்டுக்கு 270 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கையாளும் திறன் கொண்ட இந்த வளாகத்தில் உற்பத்தி தொடங்கியதும், 185 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலை எண் 41-ல் ஹால்டியா, ரானிசாக்கில் 4 வழித்தடம் கொண்ட ரயில்வே மேம்பாலம் – மற்றும் – மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அந்தத் திட்டம் ரூ.190 கோடியில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால், கோலாகாட் முதல் ஹால்டியா கப்பல் கட்டும் தள வளாகம் வரையிலும், அதன் சுற்றுப் பகுதிகளுக்கும் தடையின்றி போக்குவரத்து நடைபெறுவது சாத்தியப்படும். இதனால் பயண நேரம் குறைவதுடன், துறைமுகத்துக்கு வந்து செல்லும் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் குறையும்.
கிழக்குப் பகுதி இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் பூர்வோதயா என்ற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. மேற்குவங்க மாநில ஆளுநர், முதலமைச்சர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
அசாமில் பிரதமர்
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளின் தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்திலான `அசாம் மாலா' என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தகவல்கள் திரட்டுவதன் மூலமாக, சாலை சொத்து மேலாண்மை முறைமையுடன் இணைந்த செம்மையான பராமரிப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இது தனித்துவமான திட்டமாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகளுக்கு இடையில் இணைப்பு வசதி ஏற்படுத்துதல், தடையின்றி பல்வகை போக்குவரத்து வசதிகள் கிடைப்பதை இத் திட்டம் உறுதி செய்யும். பொருளாதார வளர்ச்சி மையங்களை, போக்குவரத்து வழித்தடங்களுடன் இணைத்து, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதாகவும் இது இருக்கும். அசாம் மாநில முதல்வர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிஸ்வநாத் மற்றும் சாராய்தேவ் ஆகிய இடங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் ரூ.1100 கோடிக்கும் மேலான செலவில் நிறைவேற்றப்பட உள்ளன. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம், மாநிலத்தில் மருத்துவர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதுடன், வடகிழக்கு பிராந்தியம் முழுவதிலும் சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வி வசதிகள் கிடைக்கும்.