பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் முதலாவது தொகுப்பைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 15 ஜனவரி 2024 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஒப்படைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.
கடைக்கோடியில் உள்ள கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் அந்தியோதயாவின் தொலைநோக்குப் பார்வையுடனான பிரதமரின் முயற்சிகளுக்கு இணங்க, குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடிக் குழுக்களின் (பி.வி.டி.ஜி) சமூக-பொருளாதார நலனுக்காக 2023, நவம்பர் 15 அன்று பழங்குடிமக்கள் கெளரவ தினத்தை முன்னிட்டுப் பிரதமர்-ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது.
சுமார் ரூ.24,000 கோடி பட்ஜெட்டுடன், 9 அமைச்சகங்கள் மூலம் 11 முக்கியமான தலையீடுகளில் இது கவனம் செலுத்துகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, மின்சாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடன் நிரப்புவதன் மூலம் குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடிக் குழுக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.