பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்பு கண்காட்சி(DefExpo) 2020 தொடக்கவிழா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 5 பிப்ரவரி 2020 அன்று நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும், பிரம்மாண்ட பாதுகாப்புக் கண்காட்சி 11-ஆவது முறையாக நடைபெறவுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று, தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைக்கவுள்ளன, இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட பாதுகாப்புக் கண்காட்சிகளில் இதுவே மிகப்பெரியதாகும்.
இந்த ஆண்டு கண்காட்சியின் மையக்கருத்து, ‘இந்தியா: வேகமாக உருவெடுத்துவரும் பாதுகாப்பு சாதன உற்பத்திக் கேந்திரம்’ என்பதாகும். பாதுகாப்புத் துறையில் முன்னணியில் உள்ள தொழில்நுட்பங்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, அரசு, தனியார் உற்பத்தியாளர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குவோருக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். நாட்டின் வான்வெளி, ராணுவம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை இந்தக் கண்காட்சி ஒட்டுமொத்தமாகப் பூர்த்தி செய்யும்.
கண்காட்சியின் துணை மையக் கருத்து, ‘பாதுகாப்புத் துறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றியமைத்தல்’ என்பதாகும். எதிர்காலத்தில் ஏற்படும் போர்கள் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமையக்கூடும் என்பதால், அதனுடன் தொடர்புடைய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழாவிற்குப் பிறகு, பிரதமர் திரு.நரேந்திர மோடி, கண்காட்சியில் இடம்பெறும் இந்தியா மற்றும் உத்தரப்பிரதேச அரங்குகளை பார்வையிட உள்ளார்.
‘இந்தியா அரங்கு’ சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் / குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதுடன், அடுத்த கட்ட புதுமை கண்டுபிடிப்பு சூழல் குறித்தும் விளக்குவதாக இருக்கும்.
உத்தரப்பிரதேச அரங்கு, அம்மாநிலத்தின் தொழில்திறன் மற்றும் ஏராளமான வளங்களை, அம்மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்கும். உத்தரப்பிரதேச அரசும், மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரிய செழுமையை பிரதிபலிக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கொட்டகை நகரில் பார்வையாளர்களுக்கும், அரிய அனுபவம் காத்திருக்கிறது.
இரண்டு அரங்குகளையும் பார்வையிட்ட பிறகு, தரையில் இயங்கும் கவச ஊர்திகள், விமானவியல் நிறுவனங்களின் சாகசப் பயிற்சிகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல் விளக்கங்களுக்கும் தலைமையேற்று பிரதமர் பார்வையிட உள்ளார்.
பாதுகாப்புக் கண்காட்சி 2020-ல் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பெரிய அளவிலான சர்வதேச பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றாகவும் அமையும்.
இந்தக் கண்காட்சியின் போது, பெருமளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதுடன், புதிய தொழில் ஒத்துழைப்புகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.