தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சியில் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ. 224 கோடிக்கான காசோலையை 2023, டிசம்பர் 25 அன்று நண்பகல் 12 மணிக்கு இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர் சங்கத் தலைவர்களிடம் காணொலி காட்சி மூலம் வழங்க உள்ளார். ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும். இதில் பிரதமர் உரையாற்றுகிறார்.
1992 ஆம் ஆண்டில் இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் ஆலை மூடப்பட்ட பின்னர், ஹுகும்சந்த் ஆலையின் தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெற நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தினர். சமீபத்தில், மத்தியப் பிரதேச அரசு ஒரு நல்ல முயற்சியை எடுத்து தீர்வை ஏற்படுத்த வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது நீதிமன்றங்கள், தொழிலாளர் சங்கங்கள், ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டது. மத்தியப் பிரதேச அரசு அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்துவது, ஆலை நிலத்தை கையகப்படுத்துவது மற்றும் அதை குடியிருப்பு மற்றும் வணிக இடமாக மேம்படுத்துவது ஆகியவை தீர்வுத் திட்டத்தில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது, இந்தூர் மாநகராட்சியால் கார்கோன் மாவட்டத்தின் சாம்ராஜ் மற்றும் ஆஷுகேடி கிராமங்களில் நிறுவப்படவுள்ள 60 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 308 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய சூரிய மின் நிலையத்தை நிறுவுவதன் மூலம் இந்தூர் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ரூ. 4 கோடி மின் கட்டணத்தை மிச்சப்படுத்த உதவும். சூரிய சக்தி ஆலை கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்வதற்காக, இந்தூர் மாநகராட்சி ரூ. 244 கோடி மதிப்புள்ள பசுமை பத்திரங்களை வெளியிட்டது. பசுமை பத்திரங்களை வெளியிடும் நாட்டின் முதல் நகர்ப்புற அமைப்பு இந்தூர் ஆகும். 29 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் ரூ. 720 கோடி மதிப்புடன் சந்தா செலுத்திய நிலையில் இந்தப் பத்திரம் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது, இது தொடங்கப்பட்ட ஆரம்ப மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும்.