2024 ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார்.
வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலய கட்டுமானத்தில் தொடர்புடைய தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர திலாவையும் பிரதமர் பார்வையிடுவார். புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்யவுள்ளார்.
பிரமாண்டமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலயம், பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி; உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளால் இது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ வடிவம் (ஸ்ரீ ராம் லல்லாவின் சிலை) வைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரதானா மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன. ஆலயத்துக்கு அருகில் ஒரு வரலாற்று கிணறு (சீதா கூப்) உள்ளது. இது பழங்கால கிணறு ஆகும். ஆலய வளாகத்தின் தென்மேற்கு பகுதியில், குபேர திலாவில், பகவான் சிவனின் பண்டைய ஆலயம் மீட்டெடுக்கப்பட்டு, ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. கோவிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க, கிரானைட் கற்களால் 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ பாதுகாப்புக்கான அமைப்பு மற்றும் ஒரு மின் நிலையம் உள்ளது. நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.