போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதன் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, 07 பிப்ரவரி 2020 அன்று அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் செல்கிறார்.
போடோலாந்து பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அஸ்ஸாம் முழுவதிலும் இருந்து சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் விதமாக, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு இன மக்களின் கலாச்சார நிகழ்ச்சிக்கும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
போடோலாந்து இயக்கத்துடன் தொடர்புடைய முன்னணி அமைப்புகளை ஒரே அணியின்கீழ் கொண்டுவந்து, இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தத்தை பாராட்டும் வகையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் 27 ஜனவரி 2020 அன்று கையெழுத்தானது.
இதுகுறித்து பிரதமர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது இந்தியாவுக்கு மிகச்சிறப்பான நாள்” என்றும், இந்த ஒப்பந்தம், “போடோ மக்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்த வழிவகுப்பதுடன், அமைதி, நல்லிணக்கம் & ஒற்றுமையில் புதிய விடியலை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் “அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப கையெழுத்தாகியிருப்பதுடன், வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துவது என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்றும் விதமாகவும், 50 ஆண்டுகால போடோ பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாகவும் அமைந்துள்ளது.
“போடோ ஒப்பந்தம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சிறப்புமிக்கது. முன்பு ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களில் இடம்பெற்றவர்கள் தற்போது தேசிய நீரோட்டத்தில் இணைந்திருப்பதுடன், தேச வளர்ச்சிக்கு பங்களிப்பாற்ற உள்ளனர்” என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களில், என்டிஎஃப்பி (NDFB) அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 1615 பேர் தங்களது ஆயுதங்களுடன் சரணடைந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.
“போடோ குழுக்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், போடோ மக்களின் தனித்துவமிக்க கலாச்சாரத்தை மேலும் பாதுகாத்து பிரபலப்படுத்த உதவும். அவர்கள் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களிலும் பங்கேற்க வகை செய்யும். போடோ மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றும் பிரதமர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக ரூ.1500 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசும், மிசோரம், திரிபுரா மாநில அரசுகளும் அண்மையில் செய்து கொண்ட ப்ரூ-ரியாங் உடன்படிக்கை, 35,000-க்கும் மேற்பட்ட ப்ரூ-ரியாங் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதுடன், திரிபுராவில் செயல்பட்டு வந்த என்எல்எஃப்டி (NLFT) இயக்கத்தைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அமைதியை ஏற்படுத்துவது என்ற பிரதமரின் உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இந்த உடன்பாடு கையெழுத்தானது.
குடியரசு தினத்தன்று தமது “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர், வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
“புனிதமான குடியரசு தினத்தில், நாட்டின் எந்தப் பகுதியிலும் வன்முறை மற்றும் ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பும் யாராக இருந்தாலும், தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும். அவர்கள் தங்களது சொந்த திறமைகளிலும் நாட்டின் மீதும் நம்பிக்கை வைத்து பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.