புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 11 அன்று காலை 10 மணிக்கு வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிடுகிறார்.
நாடு முழுவதும் 11 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ஒரே நேரத்தில் ட்ரோன் செயல்விளக்கத்தில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களையும் பிரதமர் வழங்க உள்ளார்.
நமோ ட்ரோன் சகோதரிமற்றும் லட்சாதிபதி சகோதரி திட்டங்கள் பெண்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் நிதி சுயாட்சியை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்தவை.
இந்த தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆதரவுடன் வெற்றியடைந்துள்ள மற்றும் இதர சுய உதவிக் குழு உறுப்பினர்களின் மேம்பாட்டிற்கு ஆதரவளித்து ஊக்குவித்து வரும் லட்சாதிபதி சகோதரிகளை பிரதமர் கவுரவிக்க உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைக்கும் வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் சுமார் ரூ.8,000 கோடி வங்கிக் கடன்களை பிரதமர் வழங்க உள்ளார். சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் வழங்குகிறார்.