ஜனவரி 23-ம் தேதி பராக்ரம் திவாஸ்-பராக்கிரம தினத்தில், காலை 11 மணிக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் சென்ற செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.
நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார். இந்த உணர்வின் வெளிப்பாடாக, அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும், இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்படும்.
தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இறுதியான உயிர்த்தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு இந்த சிறப்பான நடவடிக்கை என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும்.