தேசிய போர் நினைவுச் சின்னத்தில் டிசம்பர் 16, 2021 காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள அஞ்சலி & பொன்விழா வெற்றிச் சுடர் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
பங்களாதேஷ் உருவாகக் காரணமான 1971 போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் விதமாக நடைபெற உள்ள பொன்விழா வெற்றி ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள அணையா விளக்கில் இருந்து பொன்விழா வெற்றிச் சுடரை ஏற்றி வைத்தார். நாட்டின் பல்வேறு திசைகளிலும் பயணம் செய்யும் விதமாக நான்கு சுடர்களையும் அவர் ஏற்றி வைத்தார். அப்போது முதல் இந்த நான்கு சுடர்களும் சியாச்சின், கன்னியாகுமரி, அந்தமான் & நிகோபார் தீவுகள், லோங்கேவாலா, கட்ச் வளைகுடா, அகர்தலா போன்ற இடங்கள் உட்பட நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. முக்கிய போர்களங்கள் மற்றும் வீரதீர விருது பெற்றவர்கள் மற்றும் 1971 போரில் பங்கேற்ற வீரர்களின் இல்லங்களுக்கு இந்தச் சுடர்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
16 டிசம்பர் 2021 அன்று நடைபெற உள்ள அஞ்சலி நிகழ்ச்சியில், இந்த நான்கு சுடர்களும், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் பிரதமரால் இணைக்கப்பட உள்ளது.