பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன் (சூராஜ்) தேசிய இணைய தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்குகிறார். மேலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
பின்தங்கிய பிரிவினருக்கு கடன் ஆதரவுக்கான பிரதமர்-சூராஜ் தேசிய இணையதளம், பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. இது சமூகத்தின் மிகவும் நலிவடைந்தப் பிரிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்திற்கான முயற்சியாகும். வங்கிகள், என்பிஎப்சி-எம்எப்ஐ (NBFC-MFI)-கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் தகுதியான நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமாஸ்தே) திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர் நண்பர்களுக்கு (கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்கள்) ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் பிரதமர் வழங்குவார். இந்த முயற்சி சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றும் முன்னணி தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முன்னெடுப்பாகும்.
இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பயனாளிகள் பங்கேற்பார்கள்.