பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூரும் நிகழ்ச்சியில், டிசம்பர் 13 ம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலை சங்கம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிடுகிறார். நாடு முழுவதும் ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றுபவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அவர் உரையாற்றவுள்ளார்.
1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தொலைநோக்கு பார்வையுடன் நிலையான பங்களிப்பை அளித்தார். இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் விதமாக, விடுதலையின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், ஸ்ரீ அரவிந்தரின் 150- வது பிறந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பல பகுதிகளில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.