2022 ஜனவரி 2 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி மீரட் நகருக்குப் பயணம் மேற்கொண்டு பிற்பகல் சுமார் 1 மணிக்கு மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவார். மீரட்டில் உள்ள சர்தானா நகரின் அருகே சலாவா, காய்லி கிராமங்களில் ரூ.700 கோடி மதிப்பீட்டு செலவில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
விளையாட்டுக் கலாச்சாரம் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உலகத் தரத்திலான விளையாட்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதியை உருவாக்குவது உட்பட பிரதமர் கவனம் செலுத்தும் முக்கியத் துறைகளில் ஒன்றாக இது உள்ளது. மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் அமைப்பது இந்தத் தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்வதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
செயற்கை முறையிலான ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து/வாலிபால்/கைப்பந்து/கபடி மைதானம், டென்னிஸ் கோர்ட், உடற்பயிற்சிக் கூடம், செயற்கை முறையிலான ஓட்டப்பந்தய அரங்கம், நீச்சல் குளம், பல நோக்கு அரங்கம், சைக்கிள் பந்தயத்திற்கான பாதை உட்பட இந்த விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் நவீன மற்றும் பல வகை விளையாட்டு உள்கட்டமைப்புகளைக் கொண்டதாக இருக்கும். துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, படகு சவாரி, துடுப்புப் படகு சவாரி போன்ற வசதிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 விளையாட்டு வீராங்கனைகள், 540 விளையாட்டு வீரர்கள் என 1080 பேருக்குப் பயிற்சி அளிக்கும் திறனை இந்தப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கும்.