மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 29 அன்று மதியம் 12:30 மணியளவில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஸ்வர்கேட் வரையிலான புனே மெட்ரோ பிரிவையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இது புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் (முதல் கட்டம்) நிறைவையும் குறிக்கும். மாவட்ட நீதிமன்றம் முதல் ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ திட்டத்தின் செலவு சுமார் ரூ .1,810 கோடியாகும்.
மேலும், ரூ.2,955 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 5.46 கி.மீ நீளமுள்ள இந்த தெற்குப் பகுதி நீட்டிப்பு மார்க்கெட் யார்டு, பத்மாவதி மற்றும் கத்ராஜ் ஆகிய மூன்று நிலையங்களுடன் முற்றிலும் நிலத்தடியில் அமைக்கப்படும்.
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகருக்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மத்திய அரசின் தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 7,855 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மாற்றத்துக்கான பிட்கின் தொழிற்பேட்டைப் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தில்லி - மும்பை தொழில் வழித்தடத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், மராத்வாடா பிராந்தியத்தில் ஒரு துடிப்பான பொருளாதார மையமாக அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. ரூ.6,400 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தை 3 கட்டங்களாக மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சோலாப்பூர் விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையம் சோலாப்பூரை சுற்றுலாப் பயணிகள், வர்த்தகப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் எளிதில் அணுகும் வகையில் மேம்படுத்தும். தற்போதுள்ள சோலாப்பூர் முனைய கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 4.1 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பிடேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் பூலேவின் முதல் பெண்கள் பள்ளிக்கான நினைவிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்..