புந்தேல்காண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி சித்ரகூட்-டில் 29 பிப்ரவரி 2020 அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசால் பிப்ரவரி 2018-ல் அறிவிக்கப்பட்ட உத்தரப்பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்திற்கு இந்த விரைவுச்சாலை உதவிகரமாக இருக்கும்.
உத்தரப்பிரதேச மாநில அரசால் அமைக்கப்படும் புந்தேல்காண்ட் விரைவுச்சாலை, சித்ரகூட், பாண்டா, ஹமீர்பூர் மற்றும் ஜலோன் மாவட்டங்கள் வழியாக செல்லும். இந்த விரைவுச்சாலை ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக, புந்தேல்காண்ட் பகுதியை தலைநகர் தில்லியுடன் இணைக்கும் வகையில் அமைவதுடன் புந்தேல்காண்ட் பகுதியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
296 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த விரைவுச்சாலை மூலம், சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமீர்பூர், ஜலோன், ஒரையா மற்றும் எடாவா மாவட்டங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரைப்படையில் பயன்படுத்தக் கூடிய சாதனங்கள் முதல், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பிறவகையான ஆயுதங்கள் மற்றும் எச்சரிக்கை கருவிகள் வரை ராணுவ தளவாடங்களுக்கு இந்தியாவில் பெருமளவு தேவை உள்ளது. 2025 ஆம் ஆண்டு வாக்கில் 250 பில்லியன் டாலர் அளவிற்கு தேவை உள்ளது.
இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, லக்னோவில் 21, பிப்ரவரி 2018-ல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் போது உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த 6 இடங்களை தேர்வு செய்துள்ளது. லக்னோ, ஜான்சி, சித்ரகூட், அலிகார், கான்பூர், ஆக்ரா ஆகிய இந்த 6 இடங்களில், ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகியவை புந்தேல்காண்ட் பகுதியில் அமைக்கப்பட உள்ளன. இவற்றுள் ஜான்சியில் அமைக்கப்படும் தொழில் வழித்தடம் மிகப் பெரியதாக அமைய உள்ளது.
ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய இரு இடங்களிலும், சாகுபடி நடைபெறாத நிலங்கள்தான் இத்திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொடங்கி வைத்தல்
நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ள 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அதே நாளில் சித்ரகூட்டில் தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டில் உள்ள விவசாயிகளின் 86 சதவீத விவசாயிகள் 1.1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஆவர். இந்த சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகள், பயிர் சாகுபடியின் போது பல்வேறு சவால்களை சந்தித்து வந்தனர். தொழில்நுட்பம், தரமான விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் தேவையான நிதி கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் பொருளாதார வலிமையின்மை காரணமாக விளை பொருட்களை விற்பனை செய்வதிலும் பல்வேறு சவால்களை சந்தித்து வந்தனர்.
சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகள் இது போன்ற சவால்களை கூட்டாக எதிர்கொள்ள ஏதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் உறுப்பினர்களே, அந்த அமைப்பின் பணிகளை ஒன்றிணைந்து மேற்கொள்வதுடன், தொழில்நுட்பம், தரமான விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் தேவையான நிதி கிடைப்பதற்கு வழிவகை செய்வதோடு, வருமானத்தை விரைவாக மேம்படுத்திக் கொள்வதற்கான சந்தைகளையும் உருவாக்குவார்கள்.
2022-க்குள் ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்’ தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் 7,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொடங்க பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசு 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் தோட்டக் கலை உற்பத்திக்கான தொகுப்பு அணுகுமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்’ அடிப்படையில் மதிப்புக் கூட்டி, சந்தைப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதற்கென பிரத்யேகமாக “உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்” என்ற தெளிவான செயல் திட்டத்தோடு 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.